கும்பகோணம்: கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயிலில், பிரபவ முதல் அட்சய வரையிலான அறுபது தமிழ் வருட தேவதைகள், அறுபது படிக்கட்டுகளாக இருந்து இத்தலத்திற்கு வருகை தரும் முருகபக்தர்களுக்கு சேவை செய்வதாக ஐதீகம்.
கட்டுமலை கோயிலான இத்தலத்தில் தான் முருகப்பெருமான் தன் தந்தை சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திரப்பொருளை குருவாக இருந்து உபதேசம் கொடுத்தார் என்ற பெருமை கொண்டது. சுவாமிக்கே (சிவபெருமானுக்கே) நாதன் (குருவானதால்) ஆனதால் இத்தல முருகப்பெருமான் சுவாமிநாத சுவாமி என போற்றப்படுகிறார். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறந்தது நக்கீரரால் திருமுருகாற்றுப்படையிலும் அருணகிரிநாதரால் திருபுகழிலும் பாடல் பெற்றது என பெருமை கொண்ட ஸ்தலம் இதுவாகும்.
தற்போது விழாவின் 6ம் நாளில் சஷ்டியை முன்னிட்டு அதிகாலை முதல், இரவு வரை பல்லாயிரக்கன பகதர்கள் நீண்ட வரிசையில் வந்து மூலவர் சுவாமிநாத சுவாமிக்கு அர்ச்சனைகள் செய்தும், தீபங்கள் ஏற்றியும், சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவினை முன்னிட்டு, மூலவர் மண்டபத்தில் பூப்பந்தலும் அமைக்கப்பட்டு இருந்தது, நண்பகல் உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சண்முகசுவாமிக்கு விசேஷ அபிஷேகத்துடன் 108 சங்காபிஷேகமும், கலசாபிஷேகமும் நடைபெற்றது.
தொடர்ந்து இரவு அன்னை மீனாட்சி சன்னதி எதிரே, சண்முகசுவாமி, ஆட்டுகிடா வாகனத்தில் எழுந்தருளி, நவவீரர்கள் புடைசூழ, சக்தி வேல் வாங்கும் நிகழ்வு ஆயிரக்கணக்கானோர் திரண்டு நிற்க, நடைபெற்றது. இதனை தொடர்ந்து பஞ்சார்த்தி செய்யப்பட்டது.
பிறகு, ஆட்டுகிடா வாகனத்தில், சண்முகசுவாமி சன்னதி தெருவிற்கு பட்டாசுகள் கொளுத்தி, வானவேடிக்கைகளுடன் உலா வர, அங்கு சூரனை அழிக்கும் சூரசம்ஹார நிகழ்ச்சி தேரடி அருகே நடைபெற்றது.
முதலில் கஜமுகா சூரனையும், தொடர்ந்து சிங்கமுக அசூரனையும் வதம் செய்து அதன் தலைகள் வெட்டி எடுக்கப்பட்டு வந்து சண்முகசுவாமி காலடியில் வைக்கப்பட சூரசம்ஹாரம் சிறப்பாக நடந்தேறியது தொடர்ந்து இரவு தங்க மயில் வாகனத்தில் சண்முகசுவாமி திருவீதியுலா நடைபெற்றது.
பினனர் 31ம் தேதி திங்கட்கிழமை இரவு சண்முகசுவாமி தேவசேனா திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 3 நாட்களுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்ற பின்னர் நவம்பர் 04ம் தேதி வெள்ளிக்கிழமை சண்முகசுவாமி யதாஸ்தானம் சேர்தலுடன் இவ்வாண்டிற்காண கந்தசஷ்டி விழா இனிதே நிறைவு பெறுகிறது.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் சூரசம்ஹாரம்..ஏராளமான பக்தர்கள் தரிசனம்