தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், திருப்பந்துறையைச் சேர்ந்தவர் செல்வமணி (40). இவர் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டார். அதையடுத்து அவர் நன்னடத்தை காரணமாக ஆறு மாதங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று மாலை அவர், தனது வீட்டில் நண்பர்கள் மூன்று பேருடன் மது அருந்தினார். அப்போது அவருக்கும் நண்பர்கள் மூன்று பேருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதனால் ஆத்திரமடைந்த மூவரும் மறைந்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினர். அதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையில் அதனைத் தடுக்கச் சென்ற அவரின் 13 வயது மகளுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அவரது மகள் கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை காவலர்கள் வலைவீசி தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: வீட்டின் முன் தூங்கிக் கொண்டிருந்த இளைஞர் கொலை: பின்னணி என்ன?