கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சாய் கிரிப்டோ கன்சல்டன்சி என்ற பெயரில் நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் இருந்து ரூ.100 கோடிக்குமேல் பண மோசடி நடைபெற்றதாக எழுந்த புகாரை அடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய நான்குபேரை போலீஸார் கைது செய்துள்ளனர். கும்பகோணம் மேம்பாலம் அருகே சாய் கிரிப்டோ கன்சல்டன்சி என்ற பெயரில் அர்ஜுன் கார்த்திக் என்பவர் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
இந்த நிறுவனத்தில் ஆக்கவுண்டென்டாக இவாஞ்சலின் என்பவரும் அவருடன் மேலும் பல ஊழியர்களும் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் இந்நிறுவனம் சார்பில் கிரிப்டோ கரன்சி பணத்தின் மேல் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதந்தோரும் 15 ஆயிரம் ரூபாய் விகிதம், 18 மாதங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இன்றி, 18 மாதங்கள் முடிந்த பிறகு முதலீடு செய்த பணம் திரும்ப வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நம்பி, திருவாரூர் மாவட்டம் பொதக்குடி, அத்திக்கடை, கூத்தா நல்லூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்நிறுவனத்தில் தங்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனர். இந்நிலையில் பணம் முதலீடு செய்தவர்களில் சிலருக்கு மட்டும் சுமார் 6 மாதங்கள் அவர்கள் கூறிய 15 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சில மாதங்கள் பணம் வழங்கப்படாமல் இருந்த நிலையில், அந்நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் கார்த்திக் நிறுவனத்தைப் பூட்டிவிட்டுத் தலைமறைவாகியுள்ளார்.
இதனை அடுத்துப் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள், கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்நிறுவனம் இயங்கிவந்த இடத்திற்கு வந்த போலீஸார், கதவை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த கணினி உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்தையும் கைப்பற்றிச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, இது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த போலீஸார், தலைமறைவாக இருந்த அந்நிறுவன உரிமையாளர் அர்ஜுன் கார்த்திக், ஆக்கவுண்டென் இவாஞ்சலின் உள்ளிட்ட பலரைத் தேடி வந்துள்ளனர். நீண்ட நாள் தேடுதலுக்குப் பிறகு, அர்ஜுன் கார்த்திக், இவாஞ்சலின் மற்றும் இவர்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்த ராஜா மற்றும் அவரது மகன் செல்வகுமார் ஆகிய நான்குபேரை காவலர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வரும் 26 ஆம் தேதி வரை அவர்களை நீதிமன்ற காவல் எடுத்து போலீஸார் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.
இதையும் படிங்க: போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட குழந்தையின் நலனே முக்கியம் - சென்னை உயர் நீதிமன்றம் கருத்து!