தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே பிரசித்தி பெற்ற காளி தேவி கோயிலான அய்யாவாடி, பிரத்தியங்கிரா தேவி திருக்கோயிலில் திங்கட்மிழமை இமாச்சல் பிரதேச துணை முதலமைச்சர் முகேஷ் அக்னிஹோத்ரி, தனது மனைவி மற்றும் மகனுடன் வந்து நிகும்பலா யாகம் செய்தார்.
இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இத்தலத்திற்குத் தேர்தல் வெற்றிக்காக நிகும்பலா யாகம் செய்வதாக பிராத்தனை செய்து சென்றுள்ளார். தற்போது இவர் வெற்றி பெற்று துணை முதலமைச்சராகி இருப்பதால், தனது பிராத்தனையினை நிறைவேற்றிடத் தனது மனைவி மற்றும் மகன் என குடும்ப சகிதமாக அய்யாவாடி வந்த துணை முதலமைச்சர் முகேஷ், பிரத்தியங்கிரா தேவி சன்னதி எதிரே அமைக்கப்பட்டுள்ள பெரிய அக்னிக் குண்டத்தில் நிகும்பலா யாகம் எனும் மிளகாய் வற்றல் யாகம் நடத்தினார்.
இசெட் பிளஸ் (z - plus) பாதுகாப்பில் உள்ள இவர் பங்கேற்றுள்ள இந்த நிகழ்வினை புகைப்படம் மற்றும் காட்சிப்பதிவு செய்ய ஊடக செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கோயில் வளாகம் மற்றும் கோயில் வெளிப்புறப்பகுதிகளிலும், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், தஞ்சையில் இருந்து சச்சின் மோப்பநாய் மற்றும் குழுவினர் எனப் பலரும் கோயில் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இது தொடர்பாக கோயில் குருக்களான சங்கர் அவர்களிடம் ஈடிவி பாரத் நிருபர் பேசிய போது, நிகும்பலா யாகம் என்பது இழந்த பதவியை திரும்ப பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறினார். ஆட்சியை இழந்து வனவாசம் சென்ற பாண்டவர்கள் இந்த கோயிலில் சென்று நிகும்பலா யாகம் செய்த பிறகே, அரசை திரும்ப பெற்றதாக நம்பிக்கை நிலவுகிறது என கூறினார்.
ஐவர்வாடி என்பதுதான் காலப்போக்கில் வார்த்தைகள் மாறி ஐயாவாடி என்று அழைக்கப்படுகிறது. இதே கோயிலில் தான் 2002ம் ஆண்டு டான்சி வழக்கால் பதவி இழந்த ஜெயலலிதா யாகம் செய்து இழந்த பதவியை மீட்டெடுத்தார் என கூறும் சங்கர், அந்த யாகத்தை செய்து கொடுத்தது தனது தந்தை தண்டபாணி தான் என நினைவு கூர்கிறார். இதே போன்று மத்திய அமைச்சர் அமித் ஷா உட்பட பல முக்கிய அரசியல் பிரமுகர்களும் இந்த கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கோவில்பட்டியில் பாஜக கவுன்சிலர் மீசை எடுத்து நூதன போராட்டம்!