தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டம், ஆடுதுறை பேரூராட்சிக்குட்பட்ட மேலமருத்துவக்குடி கிராமத்தில், திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை சுமார் 45 மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆண்டு தோறும் புதிய மாணவர் சேர்க்கைக்கு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சம்மந்தப்பட்ட இடங்களில் பெற்றோரை நேரில் சந்தித்து பள்ளி குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கி ஊக்கப்படுத்தி ஆதரவு திரட்டி புதிய மாணவர் சேர்க்கையினை அதிகரிக்க வேண்டும் என கல்வித்துறை சார்பில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது.
அப்படி குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளை அருகில் உள்ள பிற பள்ளிகளுடன் இணைக்கவும், இதனால் இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட வேண்டிய நிலையும் உள்ளது. எனவே, விருப்பம் இருக்கிறதோ, இல்லையோ வேறு வழியின்றி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகங்கள் துண்டு பிரசுரங்களை சம்மந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களை கொண்டு பெற்றோர் பொது மக்கள் மத்தியில் வழங்கி, தங்களது பள்ளியில் புதிய மாணவர்களை சேர்க்க ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இந்நிலையில், மேலமருத்துவக்குடியில் செயல்படும் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள், தங்களது பணியை அதே பள்ளியில் தற்போது கல்வி பயின்று வரும் 4 மாணவர்களிடம் ஆசிரியர்கள் செய்ய வேண்டிய வேலையை மாணவர்களிடம் மாற்றி விட்டு, மாணவர் சேர்க்கை காண விளம்பர துண்டு பிரசுரங்களை மொத்தமாக கொடுத்து வீதி தோறும், ஒவ்வொரு வீட்டிற்கும் இந்து துண்டு பிரசுரங்களை வழங்கி, தங்களது பள்ளியில் மாணவர்களை சேருங்கள் என பள்ளிக்கு ஆதரவு திரட்டும் முயற்சிக்காக களம் இறக்கப்பட்டு, நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.
தற்போது சுட்டெரிக்கும் இந்த கடும் கோடை வெயிலில் இந்த 4 மாணவர்களும் வீடு வீடாக ஏறி இறங்கி வருகின்றனர். இந்த அப்பாவி பள்ளி மாணவர்களை இப்படி, விளம்பர துண்டு பிரசுரங்கள் வழங்க வந்திருப்பது அவர்களது பெற்றோர்களுக்கு கூட தெரியுமா!... தெரியாதா! என்பது கூட தெரியவில்லை. கொளுத்தும் அக்னி நட்சத்திர காலத்தில், கடும் வெயில் வாட்டி வதைக்கும் சூழலில், இந்த 4 பள்ளி சிறுவர்கள், கையில் துண்டு பிரசுரங்களுடன் வீதிதோறும் அலைவதை கண்டு பெற்றோர் பலரும் அதிர்ச்சியுற்றனர்.
மேலும் உச்சகட்டமாக மாணவர்களுடன் ஆசிரியர் யாரும் வராமல் அவர்கள் பணியை முழுமையாக தவிர்த்து அவர்களது பாரத்தை அப்பாவி சின்னஞ்சிறு குழந்தைகள் மீது ஏற்றிவிட்டு, அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்களின் செயல் காண்போரை வேதனை கொள்ள செய்துள்ளது. இந்த செயலுக்கு காரணமானவர்களை கல்வித்துறை விரைந்து கண்டறிந்து அவர்கள் மீது தமிழக அரசு, தஞ்சை மாவட்ட கல்வித்துறை மூலம் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ooty flower show: ஊட்டியில் 125-வது மலர் கண்காட்சி 3 ஆவது நாளாக கொண்டாட்டம்!