தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்துவருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு இடங்களில் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பரிசோதிக்கப்பட்டுவருகிறார்கள்.
இதில் பொதுமக்களும் தாங்களாகவே முன்வந்து வீட்டில் கிருமிநாசினி தெளித்து கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துவருகின்றனர்.
அந்தவகையில் தஞ்சையில் அரசுப் பேருந்து ஓட்டுநர் பேருந்தில் கிருமிநாசினி தெளித்துப் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சம்பவம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
தஞ்சை வேங்கராயன் குடிக்காட்டைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் பட்டுக்கோட்டையிலிருந்து அரியலூர் செல்லும் அரசுப் பேருந்தில் ஓட்டுநராக உள்ளார். நாஞ்சிக்கோட்டையில் வசித்துவரும் இவர், கரோனோ வைரஸ் பரவத் தொடங்கியது முதலே பேருந்தில் தினமும் மஞ்சள், பூண்டு, வேப்பிலை கலந்து இயற்கை முறையில் கிருமிநாசினி தயார்செய்து அதனைப் பேருந்து முழுவதும் தெளித்துவருகிறார்.
வேப்பிலை சிறந்த கிருமி நாசினி என்பதால் பேருந்தின் உள்ளே, வெளியே கட்டிவைத்துள்ளார். அரசுப் பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் இருவரும் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை எடுப்பதோடு, பொதுமக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்திவருவது பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: 'கரோனா மாதிரி திடீர், திடீர்னு கிளப்புறாங்க'- போலி கணக்கு குறித்து வடிவேலு!