தஞ்சாவூர்: அதிமுக கட்சி சார்பில், தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை (அக்.25) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் முன்னாள் எம்பி ரத்தினவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, ஆலோசனைகளை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசும்போது, "நீட் தேர்வு விலக்கு பெற திமுகவுடன் அதிமுக இணைய வேண்டும் என்று திமுகவினர் கூறுகின்றனர். மத்திய அரசை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதுதான் அவர்களின் சூட்சமம். தேர்தல் நேரத்தில் எதிர்கட்சிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளை எல்லாம் ஒருங்கிணைத்து இயக்கம் நடத்துவதற்காக கையெழுத்து இயக்கம் நடத்துகின்றனர். இது ஏமாற்று வேலை.
திமுக ஆட்சிக்கு வந்ததற்குக் காரணம், நீட்டை ரத்து செய்வோம், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம், அனைத்து மகளிருக்கும் உரிமை தொகை என்ற தேர்தல் வாக்குறுதிகளே ஆகும். ஆனால், இன்று நீட்டை ரத்து செய்யவில்லை கையெழுத்து இயக்கத்திற்குச் சென்று விட்டனர். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதிய திட்டம் வழங்கவில்லை அவர்கள் வீதிக்கு வந்து போராடுகின்றனர்.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு நாமத்தைப் போட்டு வெண்ணெய்யைத் தடவி விட்டார்கள். நம்முடைய வரிப்பணத்தில் கொடுக்கின்ற உரிமை தொகையைப் பெற உரிமை இருக்கிறது என்று அத்தனை பேரும் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இன்றைக்கு ஆட்சி தொங்கலில் இருக்கிறது.
3.5 லட்சம் ஏக்கர் பயிர்கள் கருகிப் போய்விட்டது, குறுவை சாகுபடியும் போய்விட்டது, சம்பாவும் கேள்விக்குறியாகி விட்டது. தமிழ்நாடு அரசு குறுவைப் பயிருக்குக் காப்பீடு செய்திருந்தால் ஏக்கருக்கு ரூபாய் 35 ஆயிரம் கிடைத்திருக்கும் ஆனால் அப்படிக் கிடைக்கவில்லை இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் பொறுப்பு" என்று தமிழக அரசைக் குற்றம் சாட்டினார்.
முன்னதாக கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் குறிப்பாகக் காவிரியில் பருவ நிலையையும் தண்ணீர் இருப்பையும் கணக்கில் கொள்ளாது மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விட்டதால் குறுவை சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூபாய் 35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "எந்தவொரு வன்முறையையும் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளாது" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்