தஞ்சாவூர்: தமிழ்நாட்டில் பல இடங்களில் டெங்கு காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளிலும் கொசுவினால் பரவும் டெங்கு காய்ச்சல் மற்றும் இதர நோய்களைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நூதன முறையில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு கடிதம் வழங்கும் நிகழ்ச்சியை மாநகராட்சி மேயர் இராமநாதன், ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை கூட்டு துப்புரவு பணியாக பிளாஸ்டிக் கப், தேங்காய் சிரட்டைகள், டயர்கள், உடைந்த பாத்திரங்கள் ஆகியவற்றில் டெங்கு லார்வாக்கள் உற்பத்தியாகாத வண்ணம் அகற்றப்பட்டு வருகின்றது.
மேலும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் வீட்டில் உள்ள சிறிய தொட்டிகளில் பிளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்தல் மூலம் ஏடிஸ் கொசுப்புழு வளராமல் தடுக்கப்படும். கொசு புகை மருந்து மாநகராட்சி பகுதிகளில் அடிக்கப்பட்டு வருகிறது.
மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியாக 300 வீடுகளுக்கு ஒரு பணியாளர் வீதம், மொத்தம் 210 களப்பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டு, டெங்கு தடுப்பு பணி நடைபெற்று வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் தினம்தோறும் டெங்கு காய்ச்சல் கண்டறியும் 12 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று டெங்கு ஒழிப்பு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனைத் தொடர்ந்து மாநகராட்சி பகுதிகளில் உள்ள 54,234 வீடுகளிலும் 210 டெங்கு தடுப்பு பணியாளர்கள் மூலம் நூதன டெங்கு தடுப்பு விழிப்புணர்வு கடிதம் வழங்கி கையொப்பம் பெற உள்ளன. இந்தக் கடிதத்தில் மாநகராட்சி மேயர் இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் கையொப்பம் இட்டு, ஏடிஸ் கொசுவினால் உண்டாகும் டெங்கு நோய் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் காய்ச்சலுக்கான அறிகுறிகள் மற்றும் உதவி மைய எண் ஆகியவை குறிப்பிடப்பட்டு, மாநகராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து மாநகராட்சி மாநகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி கூறுகையில், ‘பொதுமக்கள் ஒத்துழைப்புடன் தஞ்சாவூர் மாநகராட்சி டெங்கு இல்லாத மாநகரமாக விளங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:காவிரி நீர் விவகாரம் தொடர்பாக அண்ணாமலை அறிவித்த போராட்டம் ரத்து - கருப்பு முருகானந்தம்