தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கரோனா நோயாளிகளுக்கான ஆக்ஸிஜன் தேவையும் அதிகரித்துள்ளது.
ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மக்கள் உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில், பல நிறுவனங்கள் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை மாவட்ட நிர்வாகத்துக்கு நன்கொடையாக அளித்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, தஞ்சாவூர் தொழில் வர்த்தக கழகத்தினர் சார்பில் ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்புடைய பத்து ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மாவட்ட ஆட்சியரிடம் நன்கொடையாக அளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் தஞ்சாவூர் தொழில் வர்த்தக கழகத்தின் தலைவர் பாலசுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை பெற்றுக் கொண்ட பின்னர் ஆட்சியர் ம.கோவிந்தராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில்," கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு சிறந்த முறையில் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். அந்த வகையில் தஞ்சாவூர் தொழில் வர்த்தக கழகத்தினர் சார்பில் ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்புடைய பத்து ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
சிட்டி யூனியன் வங்கியின் சார்பில் 100 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளும், பிற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் 75 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளும் நன்கொடையாக வழங்கியுள்ளனர். தன்னார்வ தொண்டு அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் மூலம் இதுவரை மொத்தம் 200 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் நன்கொடையாக கிடைத்துள்ளன.
கரோனா நோயாளிகளுக்காகக் கூடுதலாக, 500 படுக்கை வசதிகள் ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றார்.
இதையும் படிங்க : மக்களின் மருத்துவர் அருண் பிரசாத்: 'இரவு, பகலெல்லாம் இவருக்கு கிடையாது'