தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தாக்கம் உச்சத்தில் உள்ளது. வைரஸைக் கட்டுப்படுத்தும் பணியில் மாநில அரசு தீவிரமாக களமிறங்கியுள்ளது.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அரசு பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் 2ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்களான சஞ்சய் பாலாஜி, ஜோஸ்வா ஆரோக் ஆஸ்டின், முத்துகிருஷ்ணன் மூவரும் பேருந்தை ஏழு நிமிடங்களில், கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் நவீன ரோபோவைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தக் கண்டுபிடிப்பானது இயந்திரவியல் துறை உதவிப் பேராசிரியர் சதீஷ் வழிகாட்டுதலின் பேரில் நடைபெற்றுள்ளது. இந்த ரோபோ தயார் செய்ய ரூபாய் 10 ஆயிரம் மட்டுமே செலவு ஆகும் எனத் தெரிவிக்கின்றனர், இதனை உருவாக்கிய மாணவர்கள்.
இந்நிலையில், நேற்று (ஜூன் 29) அம்மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் ரோபோ செயல் விளக்கத்தை கல்லூரிப் பேருந்தில் செய்து காட்டினர். இந்நிகழ்வில் வேளாண்துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு கலந்து கொண்டார். செயல் விளக்கத்தை நேரில் பாரத்த அமைச்சர், மாணவர்களையும், அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த பேராசிரியரையும் சால்வை அணிவித்துப் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில், பொறியியல் கல்லூரி முதல்வர் பாலமுருகன், துணை முதல்வர் கலைமணி சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.