தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனத்தில் மதமாற்றத்திற்கு எதிராக குரல் கொடுத்த ராமலிங்கம் கொலை செய்யப்பட்ட வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை தேசிய புலானய்வு முகமை விசாரித்து வருகிறது.
இந்நிலையில் தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த அமைப்பினர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகம் மற்றும் முக்கிய தலைவர்களின் வீடுகளில் நேற்று முன்தினம் ஆய்வு நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை, மதுரை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பழைய மீன் அங்காடி அருகே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். காவல்துறையின் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
போராட்டம் குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் முஹம்மது ஃபயாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை பாஜகவின் கூண்டுக்கிளியாக மாற்றப்பட்டு ஜனநாயக விரோத செய்கைகளில் ஈடுபட்டு வருகிறது. மத்திய மாநில அரசுகளின் துணையோடு இதுபோன்று என்ஐஏ செயல்பட்டு கொண்டிருக்கிறது. அந்த அமைப்பின் மீதுள்ள நம்பிக்கை மக்களிடம் குறைந்து வருகிறது. அதனால் என்ஐஏ-வை கலைத்து விட வேண்டும்", என்றார்.