தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை அருகே உள்ள பிரானூர் பார்டர் பகுதியில் ரஹ்மத் பரோட்டா ஸ்டால் என்ற பிரபல பார்டர் பரோட்டா உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பிரபலமான பரோட்டா உணவகமானது, சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான உணவகமாகும்.
குறிப்பாக, குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் ஆனந்த குளியலிட்டுவிட்டு அடுத்தபடியாக உணவு சாப்பிட செல்வது அது பார்டர் ரஹ்மத் பரோட்டா உணவகத்திற்கு தான். பிரபலமான இந்த பரோட்டா உணவகத்தில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக வாட்ஸ்அப்பில் புகார் எண் மூலம் உணவு பாதுகாப்பு துறைக்கு புகார்கள் சென்றுள்ளது. இதன் எதிரொலியாக, தென்காசி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று மாலை ரஹ்மத் பரோட்டா கடைக்கு சோதனைக்கு செல்ல திட்டமிட்டு, பாதுகாப்பிற்காக காவல் துறையினரை அழைத்துள்ளனர்.
காவல் துறையினரை பாதுகாப்புக்கு அழைத்த சிறிது நேரத்திலேயே, பார்டர் ரஹ்மத் புரோட்டா உணவகமானது பூட்டப்பட்டது. இந்த நிலையில், இன்று(பிப்.09) காலை மீண்டும் கடை திறக்கப்பட்ட சூழலில் தகவல் அறிந்து விரைந்து வந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று சோதனை செய்ய முயன்றபோது, அங்கு இருந்த ஊழியர்கள் உணவகத்திற்கு சொந்தமான பொருட்கள் தேக்கி வைத்திருந்த குடோன் மற்றும் கடையை பூட்டிவிட்டு சென்றனர்.
தற்போது, உணவகத்திற்கு பிரியாணி மட்டும் செய்து வைக்கப்பட்டுள்ள சூழலில், கடையை பூட்டி விட்டு ஊழியர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். அதேபோல், தற்போது பார்டர் பகுதியில் செயல்பட்டு வரும் முக்கியமான வேறு சில பரோட்டா உணவகங்களும் பூட்டப்பட்டுள்ளன.
மேலும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வந்த பின்பும் சோதனைக்கு உடன்படாமல் உணவகத்தை ஊழியர்கள் பூட்டிவிட்டுச் சென்றதால், கடைக்கு தேவையான பொருட்களை தேக்கி வைக்கும் குடோனுக்கு தற்போது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இதனால், அப்பகுதியில் உள்ள பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையும் படிங்க:மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இலங்கை பயணம்: காரணம் தெரியுமா?