தென்காசி: தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கடனாநதி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மூலம் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் 82 -க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.
கடந்த சில நாட்களாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் 85 அடி கொண்ட கடனாநதி அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து இன்று காலை 83 அடியை எட்டியது.
இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து பிரதான 7 மதகுகளில் ஒரு மதகு வழியாக உபரி நீர் திறக்கப்படுகிறது. மேலும் அணைக்கு தற்போது 165 கன அடி நீர்வரத்து உள்ள நிலையில் வரக்கூடிய நீர் உபரிநீராக 165 கன அடி நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும் நீர்வரத்து அதிகரித்தால் வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணையில் உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் ஆற்று பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.