தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ள குற்றாலத்தில், ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் சீசன் களைகட்டும். ஆனால் இம்முறை கரோனா தடை உத்தரவு காரணமாக குற்றாலத்தில் குளிக்க தமிழ்நாடு அரசு சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், தற்போது பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளின் வருகையின்றி குற்றாலம் வெறிச்சோடி காணப்படுகிறது.
இதற்கிடையில் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும், அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுவருகிறது. அந்தவகையில் புரெவி புயல் காரணமாக தென்காசி மாவட்டத்தில் நேற்று (டிச. 04) மாலை முதல் சாரல் மழை பெய்துவருகிறது.
இதன்காரணமாக குற்றாலத்தில் உள்ள பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் கரோனா தடை உத்தரவு காரணமாக பொதுமக்கள் வருகையை கண்காணிக்க 24 மணி நேரமும் குற்றாலத்தில் காவல் துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தொடர்மழையால் சுருளி, கும்பக்கரை, மேகமலை அருவிகளில் வெள்ளப்பெருக்கு!