தென்காசி: தென் தமிழ்நாட்டின் பிரதான சுற்றுலாத் தலமான குற்றால அருவிகள் தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது. குற்றால அருவிகளில் ஆண்டுதோறும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை மூன்று மாதங்களில் நாடு முழுவதுமிருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகைபுரிவர்.
இந்தக் காலகட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் நீராடிச் செல்வது வழக்கம். தற்போது கரோனா பரவல் காரணமாக கடந்த 9 மாதங்களாக சுற்றுலாப் பயணிகள் வருகையின்று அருவிகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதைத்தொடர்ந்து குற்றாலத்தைத் திறக்கக்கோரி வியாபாரிகள், பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் தொடர்ந்து கோரிக்கைவிடுக்கப்பட்டது.
இதையடுத்து, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே குளிப்பதற்கு அனுமதி என்ற நிபந்தனையுடன் கடந்த 15ஆம் தேதி அருவிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது. இதனால் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளில் குவிந்த வண்ணம் இருந்தனர்.
உடல் வெப்ப பரிசோதனைக்குப் பின்னர் அருவிகளில் குளிக்க அனுமதித்த நிலையில் இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகைதந்துள்ளனர். இந்நிலையில் தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு முதல் லேசான சாரல் மழை பெய்தததால் அருவிகளில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டிவருகிறது.
இதன் காரணமாக மெயின் அருவி, பழைய குற்றால அருவிகளில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி, அவர்கள் குளிப்பதற்கு காவல் துறையினர் தற்காலிகத் தடைவிதித்துள்ளனர். ஐந்தருவி, புலியருவி ஆகிய அருவிகளில் மட்டும் குளிக்க அனுமதியளித்துள்ளனர். மேலும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் காவல் துறையினர் 24 மணி நேர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா ஊரடங்கு: குற்றாலத்தில் ரூ. 4 கோடி வருவாய் இழப்பு