சென்னை: சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் கலைஞர் அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய் துறை மருத்துவர் பாலாஜியை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் இன்று (நவ.13) காலை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை கிண்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், "மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய விக்னேஷ் ஆட்டோ மொபைல் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து தற்போது கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக வீட்டிலிருந்து தன் தாயாரை கவனித்து வந்துள்ளார். மேலும், வீட்டில் மூத்த பிள்ளையான விக்னேஸ்வரனுடன், லோகேஷ் மற்றும் காமேஷ் என்ற இரண்டு சகோதரர்கள் உள்ளனர். இவர்களது தந்தை மனோகர் மூன்று மாதங்களுக்கு முன்பு உடல் நல குறைவால் இறந்துள்ளார்.
இந்த நிலையில், விக்னேஷின் தாயார் பிரேமா உடல்நலம் பாதிக்கப்பட்டு காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது. பின்னர், அடையார் புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது இரண்டாம் கட்டம் நிலையில் புற்றுநோய் உள்ளதால் விரைவில் குணமடைந்து விடுவார் என அங்குள்ள மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பெற்ற போதிய பணம் இல்லாததால், கிண்டி கலைஞர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார் விக்னேஸ்வரன் தாயார் பிரேமா. அங்கு மருத்துவர் பாலாஜி உட்பட மருத்துவ குழுவினர் ஹீமோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளை அளித்துள்ளனர். ஆனாலும், காஞ்சனாவு நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறல் பிரச்சனைகள் இருந்து வந்துள்ளது.
இதையும் படிங்க: அரசு மருத்துவரை கத்தியால் குத்தியவரை மடக்கி பிடித்தது எப்படி? முத்துரமேஷ் பேட்டி!
இத்தகைய சூழ்நிலையில், இது குறித்து மருத்துவர் பாலாஜியிடம், விக்னேஷ் முறையிட்டு கேட்டபோது அவர் சரியான பதில் அளிக்கவில்லை என்றும், அதனால் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என கூறியும் தனது தாய் பிரேமாவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளார்.
ஆகவே, கிண்டி கலைஞர் அரசு மருத்துவமனை மருத்துவர் பாலாஜி அளித்த சிகிச்சையினால்தான் தனது தாய் நுரையீரல் பாதிக்கப்பட்டு கடும் வலியை அனுபவிக்கிறார் என்றும், தனது தாயின் வேதனையை பார்க்க முடியாமல் வீட்டிலிருந்து காய்கறி நருக்கும் கத்தியை எடுத்துச் சென்று மருத்துவரை குத்தியதாகவும் விக்னேஸ்வரன் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்" என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், விக்னேஷின் உடல் நலம் பாதிக்கப்பட்ட தாய் பிரேமா செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, "எனது மகன் மருத்துவரை கத்தியால் குத்துவான் என்று எதிர்பார்க்கவில்லை. நான் படும் வேதனையை பார்த்து என் மகன் இது போன்று செய்து விட்டான். தவறான வழியில் போய்விட்டான். கிண்டி மருத்துவமனையில் இருந்தபோது மருத்துவர் பாலாஜி எடுத்த மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை கூட பார்க்காமல் அலட்சியமாக பேசுவார்.
இந்த நிலையில், நேற்று உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்து சொந்த பொறுப்பில் வீட்டுக்கு வந்தோம். எனது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் விரக்தி அடைந்த எனது மகன், மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தியுள்ளான். இந்த சம்பவம் எங்களுக்கு தெரியாது. மேலும், என் மகன் இதய நோயாளி அவனுக்கு எதுவும் ஆகக்கூடாது. அதற்காக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: மருத்துவர் கத்திக்குத்து சம்பவம்: "இளைஞர் மீது உரிய நடவடிக்கை" - உதயநிதி ஸ்டாலின் உறுதி!
மேலும் விக்னேஷின் சகோதரர் லோகேஷ் கூறுகையில், "கிண்டி கலைஞர் மருத்துவமனையில் புற்றுநோய் துறை மருத்துவர் பாலாஜி ஹீமோ தெரபி சிகிச்சை அளித்ததால்தான் எனது தாய் நுரையீரல் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையில் உள்ளார். கிண்டியிலிருந்து தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு அழைத்து சென்றபோது இனி எங்களது தாயை காப்பாற்ற முடியாது என கூறிவிட்டார்கள். இதனால் எனது தாயை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டோம்.
எங்கள் அம்மாவிற்கு அனைத்து பணிவிடைகளையும் எனது அண்ணன் விக்னேஷ்தான் மருத்துவமனையிலிருந்து பார்த்துக் கொண்டான். மருத்துவர் பாலாஜி அளித்த சிகிச்சையால் தான் இது போன்று நேர்ந்தது என்ற விரக்தியில் என் அண்ணன் விக்னேஸ்வரன் இது போன்று செய்து விட்டான்.
மேலும், பெருங்களத்தூர் காமராஜர் 1வது தெருவில் உள்ள விக்னேஷ் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி எங்களது தாயாரின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை மொத்தமாக எடுத்து சென்று விட்டனர். தற்போது எங்களது தாயார் உடல்நிலை பாதிக்கப்பட்டாலும் எங்களால் சிகிச்சைக்கு அழைத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுமட்டும் அல்லாது, மருத்துவர் பாலாஜி அளித்த சிகிச்சை தான் முழுக்க முழுக்க எனது தாய் நுரையீரல் பாதிப்படைந்ததற்கு காரணம். மேலும், மருத்துவர் பாலாஜி நோயாளிகளிடம் அலட்சியமாகவே பேசுவார் என் தாயாரிடமும் அப்படித்தான் நடந்து கொள்வார். ஆகவே, அலட்சியமாக செயல்பட்ட புற்றுநோய் துறை மருத்துவர் பாலாஜி மீது அரசு உறிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்