தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, கடந்த சில மாதங்களாக விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறாத நிலை இருந்து வந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு காணொலிக் காட்சி மூலமாக விவசாயிகள் குறைதீர் கூட்டம், அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உத்தரவிடப்பட்டு, அதன்படி நடைபெற்று வருகிறது.
தென்காசியில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம்:
அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக இன்று (டிச.17) நடைபெற்ற இம்மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வட்டார அளவில் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
ஜனவரி மாதம் முதல் வாரத்திற்குள் நேரடி கொள்முதல் மையங்கள் அனைத்து இடங்களிலும் திறக்கப்பட வேண்டும் என பெரும்பாலான விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.
வேதனை தெரிவிக்கும் விவசாயிகள்:
மேலும், இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 'காணொலிக்காட்சி மூலம் நடத்தப்படும் விவசாய குறைதீர் கூட்டத்தால், எவ்விதப் பயனும் இல்லை. இவை அனைத்தும் கண்துடைப்புப்போல உள்ளது. கடந்த மாதத்தில் அளிக்கப்பட்ட மனுக்கள் கூட தீர்வு காணப்படவில்லை.
காணொலிக் காட்சி வாயிலாக நடத்தப்படுவதால், அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொள்வதில்லை. இதனால், கோரிக்கை மனுக்கள் நேரடியாக சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, இனிவரும் காலங்களில் விவசாய குறைதீர் கூட்டத்தை அனைத்து அலுவலர்களின் முன்னிலையில் நடத்தப்பட வேண்டும்' என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் காணொலி மூலம் நடைப்பெற்ற குறைதீர் கூட்டம்