தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மனநல மையம் தொடக்க நிகழ்ச்சி இன்று (பிப்.26) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சமீரன் கலந்துகொண்டு மனநல மையத்தை தொடங்கி வைத்தார். இதில் முதற்கட்டமாக செங்கோட்டையில் 50 படுக்கை வசதிகளுடன் கூடிய மனநல மையம் அமைக்கப்பட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இணைந்து பாதிக்கப்பட்டவர்கள் குணமடைய செய்து வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும் முயற்சிகள் செய்யப்பட உள்ளன.
இதனைத் தொடர்ந்து ஆட்சியர் சமீரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து ஒற்றை இலக்க எண்ணிக்கையில் உள்ளது. தென்காசி மாவட்டம் மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ளதால் கட்டுப்பாட்டில் சில சவால்கள் உள்ளது. திருவனந்தபுரம், கொச்சின் விமான நிலையத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்கள் தென்காசி எல்லைப் பகுதியிலேயே பரிசோதனைக்கு உட்பட்டு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை குறைந்தாலும் தடுப்பு நடவடிக்கை முழுவீச்சில் உள்ளது. மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. காய்ச்சலால் பாதிக்கப்படும் அனைவரையும் டெங்கு பரிசோதனை செய்யப்பட்டு பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் தொடர்பான அறிவுறுத்தலும் செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!