தென்காசி மாவட்ட நகர் பகுதியானது 33 வார்டுகளை உள்ளடக்கிய பெரிய நகராட்சியாகும். இந்த நகராட்சியில் 11ஆவது வார்டுக்கு உள்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளத் தனியாருக்கு ஒப்பந்தமாக விடப்பட்டுள்ளது.
இப்பகுதியில் உள்ள பிரதான சாக்கடையைச் சுத்தம் செய்யும் பணியில் இன்று (அக். 20) 10-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டனர். பணியில் ஈடுபட்டவர்கள், பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல் கழிவுநீரைச் சுத்தம் செய்தனர்.
கழிவு நீர் ஓடையில், திறந்த கால்களுடன் சுத்தம் செய்யும் பணியினை மேற்கொள்ள வேண்டிய அவலம் அரங்கேறியுள்ளது. இதனால், கரோனா காலத்திலும் இரவு பகல் பாராது பணியாற்றிவரும் தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
கரோனா காலத்தில் முதல்நிலை பணியாளர்கள் எனத் தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் அவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க நகராட்சி நிர்வாகமும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.