தென்காசி: கடையநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட புளியங்குடியைச் சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் தங்கசாமி (வயது 26). இவரும் அவரது பாட்டி முப்பிலி மாடசாமி என்பவரும் சட்ட விரோதமாக, மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் இவர்கள் இருவரையும் புளியங்குடி காவல் உதவி ஆய்வாளர் பரமசிவன் தலைமையிலான காவல் துறையினர் கடந்த ஜூன் 11ஆம் தேதி கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நிலையில் தங்கசாமியை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக சிறையில் அடைக்கப்பட்ட தங்கசாமி கடந்த (14.06.2023) ஜூன் 14ஆம் தேதி புதன்கிழமை அன்று திடீரென்று மயங்கி விழுந்து இறந்துவிட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து பெருமாள்புரம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து தங்கசாமி உயிரிழந்த சம்பவத்தை அறிந்த அவரது உறவினர்கள், காவல் துறையினர் கடுமையாகத் தாக்கி சிறையில் அடைத்ததால் தான் தங்கசாமி உயிரிழந்ததாகக் கூறி தங்கச்சாமியின் இறப்புக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். பாளையங்கோட்டை ஹை கிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பிரேதப் பரிசோதனைக்கு பின்னர், தங்கசாமியின் உடலை வாங்க மறுத்து உள்ளனர்.
இதையும் படிங்க: முன்விரோதம் காரணமாக வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; இரண்டு பேர் கைது, ஒருவர் தலைமறைவு!
மேலும் ஐந்து நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் தங்கசாமியின் இறப்பு குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது. அந்த வகையில் இறந்த தங்கசாமி என்பவரின் உடலில் ஏழு இடங்களில் காயங்கள் உள்ளதாக உடற்கூராய்வு பரிசோதனை அறிக்கைகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
மேலும் இந்த நிகழ்வு குறித்து மாவட்ட காவல்துறை தரப்பில், ''தங்கசாமி என்பவருக்கு காவல் நிலையத்தில் வைத்து எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை. கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பதற்கு முன்பு வரை, அவர் உடம்பில் எந்தவித காயமும் இல்லை என்று மருத்துவச் சான்றிதழ் ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ளது'' என்று கூறப்பட்டு உள்ளது.
இதற்கு இடையே காவல் அதிகாரிகள் தாக்கியதால் தான் தங்கசாமி உயிரிழந்ததாகவும், இதன் காரணமாக இந்த வழக்கை கொலை வழக்காகப் பதிவுச் செய்ய வேண்டும் என்று கூறி உடலை வாங்க மறுத்து தங்கசாமியின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவது அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: தென்காசி: சிறையில் இளைஞர் உயிரிழப்பு.. போலீசார் அடித்ததால் மரணம் என உறவினர்கள் மறியல்!