தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்த வலசை கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 262ஆவது பிறந்த நாள் விழா வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் சார்பில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு வீரபாண்டிய கட்டபொம்மனின் திருஉருவ படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, "கமல்ஹாசனுக்கு முதலில் அரசியல் மற்றும் அதிமுக ஆட்சியை பற்றி தெரிய வேண்டும், கரோனா காலகட்டத்தில் விரைந்து எடுக்கப்பட்ட நடவடிக்கையால் இந்தியாவிலேயே முன்னுதாரணமான மாநிலமாக தமிழ்நாடு விளங்கியது, இதனை பாராட்டாமல் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார் அந்தவகையில் தமிழ்நாட்டை கமல்ஹாசன் சீரமைக்க ஒன்றுமில்லை, தமிழ்நாடு சீராக இருக்கின்ற காரணத்தினால் தான் எந்தவித மிரட்டலும், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை இல்லாமல் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொள்கிறார்.
அதிமுகவை பொறுத்தவரை நல்ல திட்டங்களை மக்களுக்கு கொடுக்கின்ற கட்சி, அதை கெடுக்கின்ற கட்சியாக திமுக உள்ளது. எப்படியாயினும் மக்களுக்கு அரசு வழங்கும் பொங்கல் பரிசை எவராலும் தடுக்க முடியாது.
அதிமுக அமைச்சர்கள் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. ஆனால் ஸ்டாலின் ஊழல் என்று பேசப்பேச மக்களுக்கு திமுகவின் ஊழல் தான் ஞாபகம் வரும். திமுக ஊழலில் ஊறிப்போன கட்சி எனவே மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் திமுக ஊழல் வாதிகள் சிறைக்கு செல்வது உறுதி” எனத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக தலைவர் கண்ணன், தென்காசி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கோப்ராகுர்த் கிராமத்தை அசத்தும் இயற்கை ஜிம்!