தென்காசி: தமிழ்நாட்டில் கால்நடை பராமரிப்பதற்கான முதல் சிறப்பு முகாம் இன்று (செப்.23) தென்காசியில் இருந்து தொடங்கப்பட்டிருக்கிறது. தென்காசியில் பல்வேறு கால்நடை மருந்தகத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்து பேசினார்.
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாப்பேரி, மாறாந்தை, பொட்டல்புதூர், ஆய்க்குடி மற்றும் வல்லம் ஆகிய இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தக கட்டடங்கள் அரியபுரத்தில் கால்நடை மருந்தகம், புல்லுக்காட்டுவலசையில் கிளை நிலையங்கள் ஆகியவற்றை தமிழ்நாடு கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று குறும்பலாப் பேரியில் நடந்த விழாவில் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் தமிழ்ச்செல்வி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பழனி நாடார், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து விழாவில் பேசிய தமிழக கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், “தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு வரும் முன் காக்கும் திட்டம் இருப்பது போன்று, கடந்த 2000ஆம் ஆண்டில் கால்நடைகளுக்கும் வரும் முன் காப்போம் திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கொண்டு வந்தார்.
இதையும் படிங்க: "உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் இறுதிச் சடங்குகளுக்கு அரசு மரியாதை" - முதலமைச்சர் அறிவிப்பு!
தற்போது தமிழ்நாட்டில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு கிராம மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கால்நடைகளுக்கு, சிறப்பு முகாம்களை நடத்திட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தமிழ்நாட்டில் முதலாவது சிறப்பு முகாம் தென்காசி மாவட்டம் குறும்பலாப்பேரியில் தொடங்கப்பட்டுள்ளது.
நாட்டுக் கோழி தட்டுபாட்டை போக்குகின்ற வகையில், நாட்டுக் கோழி பெருக்கத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு அறிவித்துள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கிராம மக்கள் அதிக அளவு பயன் அடைந்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து விழாவில் நடத்தப்பட்ட கால்நடை கண்காட்சியில் இடம்பெற்ற விவசாயிகளுக்கு பரிசுகளை அமைச்சர் வழங்கினார். இந்த விழாவில் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன், யூனியன் சேர்மன்கள் காவேரி, திவ்யா, ஷேக் அப்துல்லா மற்றும் கால்நடை மருத்துவர்கள் குழுவினர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: வசூல் வேட்டையில் பதானை ஓரங்கட்டிய ஜவான்... ரூ.1000 கோடியை நெருங்க இன்னும் இவ்வளவு தான் பாக்கி!