தென்காசி: சமூக வலைத்தளத்தில் பெண்ணிடம் பாலியல் ரீதியாக ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்து வந்த நபரை சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஜனகர் (32). இவர் தனியார் செல்போன் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன.
இவர், தான் வைத்திருக்கும் போலியான பேஸ்புக் அக்கவுண்ட்டைப் பயன்படுத்தி, தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு குறுஞ்செய்திகளை அனுப்பி வந்துள்ளார். நாளடைவில் அவருக்கு ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் செய்திகளை அனுப்பத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் இவரது குறுஞ்செய்திகளுக்கு, அந்த பெண் பதில் அளிக்காத நிலையில், அவரது தொலைபேசி எண்ணை சமூக வலைத்தளங்களில் தவறான செயல்களுக்கு அழைக்கவும் என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பெங்களூரு மெட்ரோ ரயிலில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; ஒருவர் கைது..!
இதனைத் தொடர்ந்து, அந்த பெண்ணுக்கு பல்வேறு தொலைபேசி எண்களில் இருந்து பாலியல் ரீதியான அழைப்புகள் வந்துள்ளது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண், தென்காசி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட சைபர் கிரைம் போலீசார், குறுஞ்செய்தி அனுப்பிய பேஸ்புக் ஐடியை கண்காணித்து வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அந்த ஐடியைப் பயன்படுத்தி வந்த ஜனகர் என்பவரை பொள்ளாச்சியில் கைது செய்து தென்காசிக்கு அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில், அவர் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: ஒட்டன்சத்திரத்தில் பயணியர் நிழற்குடை மீது கார் மோதி கோர விபத்து - மூன்று பேர் பலி..!