தென்காசி மாவட்டம் கடையம் அருகே சம்பன்குளம் மெயின்ரோட்டில் உள்ள பள்ளிவாசல் உண்டியலை உடைத்து ஜூன் 9 ஆம் தேதி இரவு அடையாளம் தெரியாத நபர்கள் பணத்தைத் திருடிச் சென்றனர்.
இது குறித்து பள்ளிவாசல் நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் பேரில் ஆழ்வார்குறிச்சி காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்திவந்தனர்.
இந்நிலையில் காவல் துறையினர் ஆழ்வார்குறிச்சி பகுதியில் சோதனையில் ஈடுபட்ட போது, அந்த வழியாக வந்த முருகன் (40), முகம்மது சலீம் (26) ஆகிய இருவரை விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறினார்கள்.
இதையடுத்து அவர்களிடம் தீவிர விசாரணை செய்ததில் முருகன் விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு, முகம்மது சலீம், மகேஷ் ஆகியோருடன் சென்றுள்ளார். அங்கு ஒரு மோட்டார் சைக்கிளைத் திருடி சம்பன்குளத்தில் உள்ள முகம்மது சலீமின் உறவினர் வீட்டிற்கு கருத்தப்பிள்ளையூர் வழியாக வந்துள்ளனர்.
அப்போது காசிவிஸ்வநாத புரத்தில் ஓர் வீட்டில் திருடும் நோக்கத்தில் எட்டிப் பார்த்துள்ளனர். அங்கிருந்த சிசிடிவி கேமராவில் மூவரின் உருவமும் நன்கு பதிவாகியுள்ளது. பின்னர் சம்பன்குளத்தில் வந்து பள்ளிவாசல் உண்டியலை உடைத்துப் பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து காவல் துறையினர் முருகன் மற்றும் முகம்மது சலீம் இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களுடன் திருட்டில் ஈடுபட்ட மகேஷை தேடி வருகின்றனர்.
முருகன் மீது 15-க்கு மேற்பட்ட குற்ற வழக்குகளும், மகேஷ் மீது கஞ்சா வழக்கும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...11 எம்.எல்.ஏ.க்கள் மீது புகார் அளித்த 6 பேருக்கு நோட்டீஸ்!