தென்காசி: குற்றாலத்தில் மூன்று நாட்களாக பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் பண்டிட் தீனதயாள் பயிற்சி நிகழ்வு நடைபெற்றது. இதன் நிறைவு நாளான நேற்று (அக் 15) பயிற்சி முகாமில், பாஜகவின் அகில இந்திய விவசாய அணி தலைவர் ராஜ்குமார் சாகர் எம்.பி கலந்து கொண்டு பேசினார்.
தொடர்ந்து கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த ராஜ்குமார் சாகர், “பாரதிய ஜனதா கட்சி இந்தியாவை எட்டு மண்டலங்களாக பிரித்து மண்டல அளவில் பயிற்சிகள் நடத்துகிறது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் இந்த பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியைச் சேர்ந்த பாஜக உறுப்பினர்கள், தலைவர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
பாஜகவின் வளர்ச்சி, முக்கியத்துவம் குறித்து முகாமில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மோடி, விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் என அனைத்து தரப்பட்ட மக்களுக்காகவும், தேசத்தின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபடுகிறார். தமிழ்நாட்டில் திமுக குடும்ப முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறது. ஆனால் பாஜக இவ்வாறு இல்லை. ஹிமாச்சலப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் மீண்டும் பாஜக ஆட்சி வரும்.
தமிழ்நாட்டில் மோடியை அதிக அளவு விரும்புகின்றனர். பாஜக குறித்து மக்கள் மெல்ல மெல்ல அறியத் தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமையும். தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து ஆலோசித்து வருகிறோம். இது குறித்து வேளாண் அமைச்சரிடம் எடுத்துக் கூற உள்ளோம். ஸ்டாலின் தமிழ்நாட்டில் மக்களை ஏமாற்றுகிற வேலையைச் செய்கிறார்.
ஸ்டாலின் ஃபெயிலியர் (Failure) முதலமைச்சர். பாஜக எல்லா மொழிகளையும் ஆதரிக்கக் கூடியது. தமிழில் அதற்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. இந்தியை நாங்கள் திணிக்கவில்லை. கற்றுக் கொள்ளுங்கள் என்று தெரிவித்து வருகிறோம். திமுக தமிழ்நாட்டில் தனிப்பட்ட அரசியல் செய்து வருகிறது. பாஜக எல்லோரையும் ஒருங்கிணைக்கும் விதமாக அரசியல் நடத்தி வருகிறது. விரைவில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி தமிழ்நாட்டில் அமையும். தமிழ்நாடு மென்மேலும் வளரும்” என தெரிவித்தார்.
இந்த பயிற்சி முகாமில் தமிழ்நாடு பாஜக விவசாய அணி தலைவர் நாகராஜ், பாண்டிச்சேரி பாஜக விவசாய அணி மாநில தலைவர் புகழேந்தி, பயிற்சி முகாமின் தலைவர் மற்றும் விவசாய அணி மாநில துணைத்தலைவர் எஸ்.ஆர்.தேவர், கோட்ட பொறுப்பாளர் கிருஷ்ணகுமார், கோட்ட அமைப்பாளர் கிருஷ்ணன், தென்காசி மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா, மாவட்ட பொதுச்செயலாளர் ராமநாதன், விவசாய அணி மாவட்டத் தலைவர் முத்துபாண்டியன்,
மாவட்ட பொதுச்செயலாளர் விஜய் சேகர் ராகவன், மாவட்ட பொருளாளர் ஹரி ரங்கநாதன், மாவட்ட துணைத்தலைவர் தங்கராஜ், மாவட்டச் செயலாளர் கந்தசாமி காளிராஜ், மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர் செந்தூர்பாண்டியன் மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் பாண்டித்துரை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பாஜகவுடன் திமுக சமரசமா..? ஸ்டாலின் பிரத்யேக பதில்