தென்காசி: புளியங்குடியில் இன்று (செப்.20) விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்று வந்தது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு புளியங்குடி பகுதியில் காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு இருந்தனர். மேலும், அப்பகுதியிலிருந்து புளியங்குடியில் சுமார் 10க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வந்தது.
அதைத் தொடர்ந்து, ஏராளமான பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை கண்டு மகிழ்ந்தனர். இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஒவ்வொரு வாகனங்களையும், பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் என்று சொல்லப்படும் காவலர் போல வேலை பார்த்து வரும் இளைஞர் ஒருவர், சோதனை செய்து அது குறித்த விபரங்களை தனிப்பிரிவு காவல் ஆய்வாளரிடம் ஒப்படைத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் செய்யும் ஒரு வேலையை காவலர் பணியில் நியமிக்காத ஒரு இளைஞரை வைத்து வேலை வாங்கியது குறித்து தனிப்பிரிவு காவல் அதிகாரியிடம் கேட்டபொழுது, “இவர் புளியங்குடி காவல் நிலையத்தில் பிரெண்ட்ஸ் ஆப் போலீசாக பணிபுரிந்து வருகிறார்” எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, தனிப்பிரிவு காவல் ஆய்வாளரின் இந்த பதிலால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
மேலும், தென்காசி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் காவல் துறையினர் பட்டாசு வெடிக்க அனுமதித்த நிலையில், புளியங்குடி பகுதியில் உள்ள காவல் ஆய்வாளர் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதிக்காததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. மேலும், புளியங்குடி காவல் ஆய்வாளர் தனித்து செயல்பட்டதாக பாஜகவினர் குற்றம் சாட்டினர்.
அதைத் தொடர்ந்து, இந்து முன்னணியினர் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் துவங்குவதற்கு முன்பாக பட்டாசுகளை வெடித்து மேளதாளங்களுடன் துவங்க வேண்டும் என்று நினைத்தபொழுது, அதனைத் தடுத்த புளியங்குடி காவல் ஆய்வாளர், இங்கு பட்டாசுகள் வெடிக்க கூடாது எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து, திருமண நிகழ்ச்சிகள், சுபகாரியங்கள் போன்ற நிகழ்வுகளில் சாலைகளில் வெடி போட அனுமதிக்கும் காவல் துறையினர் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் மட்டும் தடுப்பது ஏன் என கேள்வி எழுப்பினர். இதனையடுத்து, புளியங்குடி காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணனுக்கும் பாஜகவினருக்கும், இந்து முன்னணியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் நடந்த இந்த நிகழ்வுகளால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. விநாயகர் ஊர்வலத்தில் வெடிக்க வைத்திருந்த பட்டாசுகளை காவல்துறையினர் வண்டியில் ஏற்றி எடுத்துச் சென்றனர். பின்பு ஊர்வலம் தொடர்ந்து நடைபெற்றது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ‘மரியாதையையே பெண்கள் விரும்புகின்றனர்’ - கனிமொழி எம்பி பேச்சு!