கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இதனால் காய்கறி மார்க்கெட், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் மாற்றப்படாமல் அதே இடத்தில் செயல்பட்டதன் விளைவாக அங்கு உள்ள வியாபாரிகள் , காய்கறி வாங்கச் சென்றவர்கள் , லாரி ஓட்டுனர்கள் என பலருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லையில் ஏற்கனவே தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை காய்கறி மார்ககெட், நயினார்குளம் சில்லறை வியாபார சந்தை, உழவர் சந்தை ஆகியவை பிரிக்கப்பட்டு மக்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றது.
டவுன் நயினார்குளம் காய்கறி மார்க்கெட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வந்தன. இதனிடையே நயினார்குளம் சந்தைக்கு கூட்டம் அதிகமாக கூடும் நிலை உள்ளதால் மாவட்ட நிர்வாகம் நயினார்குளம் மொத்த விற்பனை காய்கறி மார்கெட்டை பழைய பேட்டை சரக்கு முனையப்பகுதிக்கும் , வசதியுள்ள இதர பகுதிக்கும் பிரித்து மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலர்கள் காய்கறிச் சந்தையை வியாபாரிகளிடம் மாற்றம் செய்ய அறிவுறுத்திய நிலையில், இங்கிருந்து கடைகள் மாற்றப்பட்டால் அதிக அளவில் பொருள் செலவு ஏற்படும். வேலையால்கள் அதிகம் தேவைப்படுவார்கள் எனக் கூறி வியாபாரிகள் கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம் கடைகளை கண்டிப்பாக இடமாற்றம் செய்ய வேண்டும் என கூறியதைத் தொடர்ந்து நயினார்குளம் காய்கறி மார்க்கெட் மொத்த விற்பனை வியாபாரிகள் இன்று முதல் காலவரையின்றி கடைகளை மூடுவதாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் காய்கறிகள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தென்காசியில் தலை தூக்கும் கரோனா - இருவர் பாதிப்பு