தென்காசி: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாகத் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் நேற்று (டிச.17) முதல் தொடர் மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் நீர்நிலைகள் நிரம்பிக் குடியிருப்பு பகுதியில் மற்றும் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் தென்காசி பணிமனையிலிருந்து திருநெல்வேலி மற்றும் நாகைக்குச் செல்லும் பேருந்துகளின் சேவை நேற்று குறைக்கப்பட்ட நிலையில் தற்போது இருபதுக்கும் மேற்பட்ட பேருந்துகளின் சேவை முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தென்காசியிலிருந்து ஆலங்குளம் மற்றும் அம்பாசமுத்திரம் வரை மட்டுமே தற்போது பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், தொடர் மழையின் காரணமாகப் பேருந்துகளில் மக்கள் கூட்டம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது. ஆலங்குளம் மற்றும் அம்பாசமுத்திரம் பகுதி தாண்டி உள்ள சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாலும் சாலைப் பணிகள் நடைபெற்று வருவதாலும் பேருந்து செல்ல முடியாத சூழ்நிலை உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
இதையும் படிங்க: தண்ணீரில் தத்தளிக்கும் நெல்லை: மூழ்கியது ஆட்சியர் அலுவலகம்.. நெல்லையில் நிலைமை கைமீறியதா?