தென்காசி: சங்கரன்கோவிலை அடுத்துள்ள தலைவன் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ் - கோகிலா தம்பதியினர். இவர்களின் மகள் முவித்ரா (6). இவர் கடந்த சில மாதங்களாக ஸ்கேட்டிங் பயிற்சி பெற்று வந்துள்ளார். பிறகு ஸ்கேட்டிங் பயிற்சியாளர் பாக்யராஜ், முவித்ராவின் வேகத்தைக் கண்டு உலக சாதனை ஆர்வத்தைத் தூண்டி பயிற்சி அளித்துள்ளார்.
இதன் காரணமாக இன்று (அக்.6) 'யுனிவர்சல் ஆஃப் வேல்டு ரெக்கார்டு' என்ற உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்கான முயற்சி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி, இன்று காலையில் சங்கரன்கோவில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுதீர் முன்னிலையில், சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஈஸ்வரன் முவித்ராவின் ஸ்கேட்டிங் சாதனை முயற்சி ஓட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர், சங்கரன்கோவிலில் இருந்து கோவில்பட்டி சாலையில் உள்ள அழகநேரி கிராமம் வரையிலான சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தை முவித்ரா 27 நிமிடங்கள் 32 விநாடிகள் ஸ்கேட்டிங் ஓட்டத்தில் கடந்து உலக சாதனை முயற்சியில் வெற்றி அடைந்தார். இதனையடுத்து, சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஈஸ்வரன், சங்கரன்கோவில் நகர் மன்றத் தலைவர் உமா மகேஸ்வரி சரவணன், விவேகானந்தர் யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக நிறுவனர் சுரேஷ்குமார் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், விளையாட்டு வீரர்கள் என அனைவரும் பவித்ராவை பாராட்டினர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஸ்கேட்டிங் உலக சாதனை நிகழ்ச்சியில் சங்கரன்கோவிலைச் சேர்ந்த ஆதவன் என்ற 7 வயது மாணவன் 10 கிலோ மீட்டர் தூரத்தை 32 நிமிடத்தில் ஸ்கேட்டிங் ஓட்டத்தில் கடந்து உலக சாதனை படைத்திருந்த நிகழ்வைவிட, தற்போது 6 வயது சிறுமி 10 கிலோ மீட்டர் தூரத்தை 27 நிமிடம் 32 விநாடிகளில் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் விளையாட்டு வீரர்கள் அடுத்தடுத்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் உலக சாதனை நிகழ்த்தி வரும் சூழ்நிலையில், விளையாட்டுத் துறை சம்பந்தமாக விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழகத்தில் விளையாட்டு மைதானங்கள் புதிதாக அமைக்க வேண்டும் எனவும், குறிப்பாக, சங்கரன்கோவிலில் ஸ்கேட்டிங் பயிற்சி பெறுவதற்கான சூழலை உருவாக்கும் வண்ணம் ஸ்கேட்டிங் தளங்கள் அமைத்து, பயிற்சி அளிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, உலக சாதனை முயற்சி ஸ்கேட்டிங்கில் சாதனை படைத்த முவித்ரா மற்றும் பெற்றோரை அழைத்து தமிழக முதல்வரைச் சந்தித்து வாழ்த்து பெறவுள்ளதாகவும், முவித்ரா மேலும் பல சாதனைகளை படைக்க தாங்கள் உறுதுணையாக இருப்போம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.