தென்காசி: கடையநல்லூர் அருகே உள்ள சேந்தமரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட இடைகால் - சேர்ந்தமரம் செல்லும் சாலையில் கள்ளம்புளி கிராமத்தில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடை அதன் அருகே இளையபாண்டி என்பவர் அரசு அனுமதியுடன் பார் நடத்தி வருகிறார்.
அக்.2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி என்பதால், இதற்கு முதல் நாளே சட்டவிரோதமாக கள்ளம்புளி கிராமம் அரசு டாஸ்மாக் மதுபான கடையில் மதுவிற்பனை நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைதொடர்ந்து, இது குறித்த ஆய்வுக்காக, அக்.1ஆம் தேதி இரவு நேரத்தில் சேந்தமரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் 10-க்கும் மேற்பட்ட போலீசார் சாதாரண உடையில் கள்ளம்புளி கிராமம் அரசு டாஸ்மாக் மதுபான கடைக்கு வந்தனர். அப்போது அங்கு அருகில் இருந்த பாரில் அதன் உரிமையாளர் இல்லாத நேரத்தில் இரவு 10:00 மணிக்கு மேல் நுழைந்த போலீசார், அங்கிருந்த கடை ஊழியர்களை மிரட்டியதோடு கடை கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.50,000 பணத்தை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக கடம்பன்குளத்தை சேர்ந்த முருகையா(37), வேலப்பநாடாரூரை சேர்ந்த கணேசன்(47) ஆகிய இருவரை சட்டவிரோதமாக காட்டுப்பகுதிக்குள் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததாக பொய் வழக்கில் கைது செய்ததாக கூறப்படுகிறது. மேலும் பாரின் உரிமையாளர் நொச்சிகுளம் மேலத் தெருவை சேர்ந்த இளையபாண்டி மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனால் கடந்த சில நாட்களாக பாரின் உரிமையாளர் இளையபாண்டி தலைமறைவாகி இருந்த நிலையில், தற்போது நீதிமன்ற மூலமாக முன் ஜமீன் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சம்பவத்தில் ஈடுபட்ட 3 காவலர்கள் கடந்த வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், பாரின் உரிமையாளர் இளையபாண்டி டாஸ்மார்க் பாரில் வந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது போலீசார் சட்ட விரோதமாக கல்லாப்பெட்டியை திறந்து பார்க்கும் வீடியோவும் பதிவாகி உள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: பெரம்பலூர் அருகே கூலிப்படையை வைத்து மனைவியைக் கொன்ற கணவன் - காரணம் என்ன?