சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் திராவிடர் விடுதலைக் கழகத்தில் உறுப்பினராக உள்ளார். இவர் கோட்டையூரில் சொந்தமாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். அந்த வீட்டருகே மார்பளவு பெரியார் சிலை ஒன்றை நிறுவினார். இந்த சிலையை திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைக்க இருந்ததாக தெரிகிறது.
இன்று(ஜன.29) சிலை திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று இளங்கோவன் வீட்டுக்குச் சென்ற வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள், சிலையைத் திறக்க அனுமதியில்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பிறகு வலுக்கட்டாயமாக சிலையை அகற்றியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
தனியார் இடத்தில் சிலை வைக்கலாம் என நீதிமன்ற தீர்ப்புகளில் கூறப்பட்டுள்ள நிலையில், காவல் துறையினரின் இந்த அத்துமீறலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கோட்டையூரில் வீட்டில் நிறுவப்பட்ட பெரியார் சிலையை அகற்றிய வருவாய் வட்டாட்சியர் கண்ணன் மற்றும் காவல் துறை பொறுப்பு துணை கண்காணிப்பாளராக இருந்த கணேஷ்குமார் இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பெரியார் சிலை வைக்கப்பட்டிருந்த இளங்கோவனின் வீட்டருகே பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜாவின் வீடு இருப்பதாகவும், பாஜகவின் தூண்டுதல் காரணமாகவே சிலை அகற்றப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.