சிவகங்கை: காரைக்குடி அருகேயுள்ள கிராமத்தைச்சேர்ந்த 17 வயது சிறுவன், தனியார்ப்பள்ளி ஒன்றில் பிளஸ் +2 பயோ கணிதப்பாடப்பிரிவில் படித்து வந்தார்.
இதனிடையே மாணவன் நேரடி வகுப்புகளில் கவனம் செலுத்த முடியாமல் மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை (ஜூலை 26) மாணவரின் பெற்றோர் மட்டும், திருச்செந்தூர் அருகே உள்ள அவரது குல தெய்வ கோயிலுக்குச்சாமி கும்பிடச்சென்றுள்ளார்.
பள்ளி சென்று வீட்டுக்குத்திரும்பி வந்த மாணவன், இரவு 11 மணி ஆகியும் வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டிப்பார்த்துள்ளனர். கதவைத் திறக்காததால் வீட்டின் உள்ளே பார்த்தபோது, உட்புறமாக தாழிட்டுக்கொண்டு மாணவன் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதையடுத்து, அவரது பெற்றோருக்கு அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். பின், போலீசார் நேரில் சென்று மாணவர் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
மாணவன் இறப்பதற்கு முன்பு, ’நான் நல்ல முறையில் படித்து பெரிய ஆளாக வர வேண்டும் என்ற உங்கள் ஆசையை என்னால் நிறைவேற்ற முடியவில்லை; என்னை மன்னித்து விடுங்கள்; என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை’ என வீட்டுச் சுவரில் எழுதி விட்டு இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் - 5 பேருக்கு ஒருநாள் சிபிசிஐடி காவல்