சிவகங்கை அரசு கலைக்கல்லூரி அருகே மாவட்ட விளையாட்டு மையம் செயல்பட்டு வருகிறது . இதில் மாவட்ட விளையாட்டு அலுவலராக கீதா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இங்குள்ள நீச்சல் பயிற்சி மையத்தில் சுமார் 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில், இங்குள்ள நீச்சல் பயிற்சியாளர் முறையாக பயிற்சியளிக்கவில்லை என்றும் மேலும் நீச்சல் குளம் முறையாக பராமரிக்கப்படாமலும் தினசரி பயிற்சி பெறுபவர்கள் காயமடைவதாகவும் கூறப்படுகிறது. மேலும், பிரதான நுழைவாயிலில் இருந்து நீச்சல் குளம் வெகுதூரம் உள்ள நிலையில், வாகனங்களை அனுமதிக்காமல் தினசரி மாணவர்கள் நடந்து செல்ல வேண்டி இருப்பதாகவும் குற்றம்சாட்டினர்.
இது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் கீதாவிடம் முறையிட்டால், சரியாக பதில் எதுவும் அளிக்காமல் தகாத வார்த்தைகளால் மாணவர்களை திட்டுவதுடன் அதுகுறித்து கேட்க வந்த பெற்றோர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் 50க்கும் மேற்பட்டோர் இன்று சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் புகார் மனுவை அளித்தனர்.
இதுகுறித்து விளையாட்டு அலுவலரிடம் இது குறித்து கேட்டதற்கு அவர் பதிலளிக்கையில், வாகனங்கள் உள்ளே வருவதால் பயிற்சி மாணவர்களுக்கு இடைஞ்சலாக இருப்பதாகவும், தான் தகாத வார்த்தைகளால் எதுவும் திட்டவில்லை என்றும் தெரிவித்தார்.