சிவகங்கை: காரைக்குடியில் உள்ள அன்னை இந்திராகாந்தி அரங்கத்தில் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "கடந்த 10 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த கதர் துறையை செயல்பட வைத்த அமைச்சருக்கு நன்றியை தெரிவிக்கிறேன். இவ்வளவு நிதி நெருக்கடியிலும் வாக்குறுதிகளை நிறைவேற்றிவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது காரைக்குடி பகுதிகளில் வேளான் கல்லூரி, சட்டக்கல்லூரி வேண்டும் என பேசினேன். அதனை உடனே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார் . என்னுடைய மூன்றாவது கோரிக்கையாக உள்ள அழகப்பா பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
கோடநாடு குற்றம் நடந்தது உண்மை. இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.மோடி அரசை ஆட்சியில் அமைத்ததன் காரணமாக சிலிண்டர் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. மொத்தமாக அனைத்து துறைகளையும் விற்கிறார்கள்.
70 ஆண்டுகளாக நிர்வகித்து வந்த பொதுத்துறை நிறுவனங்களுக்கு மத்திய அரசு மூடுவிழா நடத்த முடிவு செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். ரயில்வே, விமான நிலையம் ஆகியவற்றை தனியார்மயமாக்க போகிறார்கள். இது குறித்து யாரிடமும் ஆலோசிக்கவில்லை.
இதனை ஆர்.எஸ்.எஸ் தொழிற்சங்கம் கூட எதிர்த்துள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு பாராட்டுகள். இலங்கை பொருளாதார வீழ்ச்சி என்பது இந்தியாவையும் பாதிக்கும். உள்ளாட்சி தேர்தலில் தற்போதைய கூட்டணியே தொடரும். வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாகதான் உள்ளது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சட்ட விரோதமாக மண் அள்ளிய வழக்கு - தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு