சிவகங்கை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் மக்களவை தேர்தல் வேட்பாளர் சிநேகன் சிவகங்கை நகர் முழுவதும் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சிநேகன், 'தலையெழுத்தை நிர்ணயிக்கின்ற ஆயுதம் உங்கள் கைகளில் உள்ளது. அரசியல்வாதிகள் சரியாக இல்லாததால் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் சிவகங்கை எப்படி இருந்ததோ, அப்படியே எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது. சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் தன்னை உயர்த்திக் கொண்டு இருக்கிறார்களே தவிர தொகுதியில் எந்த முன்னேற்றமும் இல்லை.
இந்தியாவிலேயே நான்கு முறை நிதியமைச்சரை பெற்ற தொகுதி, உள்துறை அமைச்சர் பெற்ற தொகுதி வறுமையில் தத்தளிக்கிறது. மக்களைப் பற்றியும், விவசாயத்தைப் பற்றியும், இந்த மண்ணைப் பற்றியும் எந்த கவலையும் இல்லாமல் தன் குடும்பத்தை பற்றி மட்டுமே கவலைப்பட்டவர் ப.சிதம்பரம். தந்தை மக்களுக்கு உழைத்து களைத்துப் போய் விட்டார். அதனால் தன் மகன் கார்த்தி சிதம்பரத்தை வேட்பாளராக நிற்க வைத்து உள்ளார். அவர் என்ன செய்யப்போகிறார் என்று தெரியவில்லை.
இந்த ஐந்து வருடத்தில் இந்தியாவை டிஜிட்டல் இந்தியாவாக மாற்ற போகிறோம் என்று சொன்ன மோடியின் வேட்பாளர் எச்.ராஜாவிற்கு வாக்களிப்பது வீட்டில் நல்ல பாம்புக்கு புற்று கட்டி வைப்பது போல் நம்மை எப்போது கொத்தும் என்பது யாருக்கும் தெரியாது' என்று தெரிவித்தார்.