சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக நடைபெற்றுவருகின்றன. இந்த முறை கீழடி மட்டுமன்றி அருகிலுள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும் களப்பணிகள் நடைபெற்றுவருகின்றன.
கொந்தகையில் மனித எலும்புக்கூடுகள், முதுமக்கள் தாழிகள், பானைகள், இரும்பு பொருள்கள் கிடைத்துள்ள நிலையில் அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் உலை அடுப்பு, தங்க நாணயம், உறை கிணறுகள் ஆகியவை கிடைத்துவருகின்றன.
கீழடி அகழாய்வில் சங்க கால செங்கல் கட்டுமானங்கள், பெரிய விலங்கின் எலும்புக்கூடு, குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் என நூற்றுக்கணக்கில் கிடைத்துவருகின்றன.
செப்டம்பர் மாத இறுதியுடன் ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவுறும் தறுவாயில் ஆவணமாக்கல் பணிகளோடு அகழாய்வு பணிகளும் தற்போது நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில் இதுவரை நடைபெற்ற கீழடி ஆறு கட்ட அகழாய்வில் 10-க்கும் மேற்பட்ட உறை கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 18 அடுக்குகளைக் கொண்ட உறைகிணறுதான் பெரிய அளவிலானதாக இருந்தது.
தற்போது நடைபெற்றுவரும் அகரம் அகழாய்வில் முதல் முறையாக 20-க்கும் மேற்பட்ட அடுக்குகளைக் கொண்ட உறை கிணறு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த உறைகிணறு 80 சென்டிமீட்டர் விட்டமும் 380 சென்டிமீட்டர் உயரமும் கொண்டதாக உள்ளது.
அகரம் அகழாய்வில் 25 அடுக்குகள் கொண்ட உறை கிணறு கண்டெடுப்பு:
தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற அகழாய்வுகளில் அதிகபட்சமாக 28 அடுக்குகள் கொண்ட உறை கிணறு கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது 2ஆவது முறையாக 25க்கும் மேற்பட்ட அடுக்குகளைக் கொண்ட உறைகிணறு கீழடி-அகரம் அகழாய்வில் தற்போது கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பாக, திருவள்ளூர் மாவட்டம் பட்டறை பெரும்புதூரில் 28க்கும் மேற்பட்ட அடுக்குகளைக் கொண்ட உறைகிணறும் கீழடியில் 18 அடுக்குகள் கொண்ட உறை கிணறும் கிடைத்துள்ளன என்று தொல்லியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அழகுமுத்துகோன் சிலை வைத்தால் பிரச்னை - கபடி வீரரின் சிலை வைத்தால் பிரச்னை இல்லை