கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மலை பகுதிகளில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருவதால் கர்நாடக மாநில கபினி, கிருஷ்ணராஜ சாகர் போன்ற அணைகள் நிரம்பி வருகின்றன. இதனால் கார்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் பல லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
நீர் வரத்து அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணையில் நீரின் அளவு 100 அடியை எட்டியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு கர்நாடக மாநிலங்களின் எல்லைப் பகுதியான பாலாறு அடுத்த கோபிநத்தம் , செங்கப்பாடி, புதூர், ஜம்பூத்து, கோட்டூர் உள்ளிட்ட காவிரிக்கரை கிராமங்களுக்குள் வாகனங்கள் செல்ல கர்நாடக மாநில வனத்துறை தடை விதித்துள்ளது.
இந்த தடை கடந்த நான்கு நாட்களாக நீடிப்பதால் அந்தப் பகுதிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் கர்நாடக மாநில எல்லையில் உள்ள சோதனைச்சாவடியோடு திருப்பி விடப்படுகின்றனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.