சேலம்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, இன்று (மார்ச் 7) சேலத்தில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய விக்கிரமராஜா, “தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வருகிற மே 5ஆம் தேதி ஈரோட்டில் வணிகர் தின மாநில மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இந்த மாநாட்டில் சேலம் மாவட்டத்தில் இருந்து சுமார் 25,000 வணிகர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதனிடையே தற்போது வர்த்தக கேஸ் சிலிண்டர்களின் விலை 400 ரூபாய் உயர்ந்திருக்கிறது. இதனால் டீ, இட்லி மற்றும் தோசை ஆகியவற்றின் விலையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால், வர்த்தக கேஸ் சிலிண்டரின் விலையைக் குறைக்க வேண்டும். அதேநேரம் உணவுப் பாதுகாப்பு விதிகள் கடுமையாக உள்ளது. சில நேரங்களில் அதிகாரிகளால், வியாபாரிகள் அச்சுறுத்தப்படுகின்றனர். தமிழ்நாட்டில் வடமாநிலத்தொழிலாளர்களுக்கு எந்த அச்சமும் இல்லை.
அவர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் உரிய பாதுகாப்பு அளித்துள்ளார். ஆகையால் வடமாநிலத்தவர்கள் யாரும் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டாம். வடமாநிலத்தவர்கள் வருவதால் தமிழ்நாட்டின் சகோதரர்கள், பெண்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. வடமாநிலத்தவருக்கு போக்குவரத்து செலவு மற்றும் சம்பளம் ஆகியவையும் முறையாக வழங்கப்படுகிறது. அவர்களுக்கு வேலைக்கு உரிய சம்பளம் வழங்கப்படுகிறது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் மூலம் உரிமம் பெறுவதற்கும், புதுப்பித்தலுக்கும் பல வித சட்டங்கள் உள்ளன. இதைப் பரிசீலனை செய்து எளிமைப்படுத்த வகை செய்ய வேண்டும். உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தைத் திருத்தம் செய்ய வேண்டும். வணிக உரிமங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் ஒற்றைச் சாளர முறையில், ஆயுள் உரிமமாக மாற்றி வணிகர்கள் எளிதாக உரிமம் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் நடக்கும் மாநாட்டில் தீர்மானத்தை நிறைவேற்ற உள்ளோம். மெட்ரோ ரயில் திட்டத்தால் பல கடைகள் மாற்றப்பட்டிருக்கிறது. வெள்ள சேதத்தால் வியாபாரிகள் பலர் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இவர்களுக்கெல்லாம் சலுகைகள் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சரிடம் பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளோம். மாதம்தோறும் மின் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் கேட்டுள்ளோம்' என கூறினார்.
இந்த நிகழ்வின்போது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சேலம் மாவட்ட தலைவர் பெரியசாமி, மாவட்டச் செயலாளர்கள் வர்க்கீஸ், இளையபெருமாள், பொருளாளர் சந்திரதாசன், நிர்வாகிகள் சியமாளநாதன், ராஜேந்திரன், திருமுருகன் மற்றும் சேலம் நகர அனைத்து வணிகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜெயசீலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: "வட மாநிலத்தினருக்கு எதிராக திமுக ஒருபோதும் வெறுப்பு அரசியல் செய்யவில்லை" - அமைச்சர் துரைமுருகன்!