நீட் தேர்வு அச்சத்தின் காரணமாக நேற்றிரவு தருமபுரியில் தற்கொலை செய்துகொண்ட மாணவர் ஆதித்யாவின் உடல் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பூசாரிப்பட்டி அடுத்த பாலிக்காடு கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது. பொதுமக்கள் ஆதித்யா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், பூசாரிப்பட்டி வந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ஆதித்யாவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் ஆதித்யாவின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்து, திமுக சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் நிதி உதவியை வழங்கினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நீட் தேர்வால் மாணவர்கள் அச்சம் அடைந்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்யாமல் எருமை மாட்டின் மீது மழை பெய்வது போல் மத்திய, மாநில அரசுகள் உள்ளன.
திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். அனைவரும் முடிவு எடுக்க வேண்டிய நேரம் இது. கடந்த நான்கு ஆண்டுகளில் 12 பேர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவர்கள் தற்கொலை நீடித்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த உடனே நீட் தேர்வு கட்டாயம் ரத்து செய்யப்படும்.
இந்த அடிமை ஆட்சி போல திமுக இருக்காது. ஆட்சியாளர்களுக்கு மாணவர்கள் மீது அக்கறை இல்லை. இன்று நடைபெற்ற நீட் தேர்வில் நிறைய பிரச்னைகள் இருந்தன. மாணவர்களுக்கு சாப்பாடு கிடையாது. தேர்வு நடத்தியதில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. அதிமுக நீட் தேர்வு வேண்டாமென பொய்யான வார்த்தைகளையே கூறி வருகிறது" இவ்வாறு தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல்