சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகாவுக்குட்பட்ட பெத்தேல் காலனியில் 50க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், பெத்தேல் காலனி மக்கள் பயன்படுத்தி வந்த நடைபாதையை ஆதிக்க சமூகத்தினர் மறித்துள்ளதாகவும், சுடுகாடு செல்லக்கூட வழிவிடவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கடந்த 2 மாதத்துக்கும் மேலாக வெளியே சென்று வரமுடியாமலும், வேலைக்குச் செல்லும் ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சொந்த வீடு இருந்தும் அனாதை போல காடையாம்பட்டியில் தங்கி வேலைக்குச் செல்லும் அவலம் நீடித்து வருகிறது. அதிமுக பிரமுகர் ராஜேந்திரன் என்பவர் சாலையை மறித்து கற்களை அடுக்கி வைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இதனைத்தொடர்ந்து ஆதிக்க சமூகத்தினருக்கு துணைபோகும் வருவாய்த்துறையை கண்டித்து சேலம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெத்தேல் காலனி மக்கள் குடங்கள் , பாத்திரங்கள், அரிசி, விறகை தலையில் சுமந்து போராட்டம் செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை மறித்து, ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெத்தேல் காலனி மக்கள், "இரண்டு மாதங்களுக்கும் மேலாக நாங்கள் வீட்டுக்கு செல்ல முடியாமல் தவிக்கிறோம். ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தவர் பொதுவழியை தனக்குச் சொந்தமானது என்று கூறி பாறாங்கல்லை போட்டு வைத்துள்ளார்.
அதிமுக பிரமுகர் ராஜேந்திரன் மீது காவல்துறையில் புகார் செய்தும் பலனில்லை. அரசு அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் அவருக்கு ஆதரவாக பேசி அலுவலர்கள் செயல்படுகின்றனர். நாங்கள் யாரை நம்புவது, எங்களுக்கு உதவி செய்ய யாருமில்லை" என்று கண்ணீர் வடித்தனர்.
இதையும் படிங்க: ’பாழா போன கவர்மெண்ட் ஆபிசுல கக்கூஸ் கூட இல்ல’