சேலம்: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் நேற்று (அக்.04) சந்தித்து பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு நன்றி தெரிவித்துள்ளனர். அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் கடந்த சில காலமாகவே கூட்டணியில் இணைந்து பயணித்து வந்தது.
கடந்த லோக்சபா தேர்தலில் கூட்டணி உருவான நிலையில், இரு கட்சிகளும் இணைந்தே பயணித்து வந்தனர். இடையில், சில மோதல்கள் வந்தாலும், இரு கட்சிகளும் இணைந்தே பயணித்தனர். இந்தச் சூழலில் அண்ணா குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறிய கருத்துகள் பெரும் சர்ச்சையானது.
அதைத் தொடர்ந்து, பாஜக உடனான கூட்டணி முறிவு நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம், பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என்பதை தெளிவாகக் கூறிவிட்டோம், தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் அடிப்படையில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் அதிமுக உறுதியாக உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநிலத் தலைவர் சரீப் தலைமையிலான நிர்வாகிகள் சந்தித்து பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநிலத் தலைவர் சரீப் பேசியதாவது, “பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதற்கு வாழ்த்துகள். இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் 36 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று அதிமுக மாநாட்டில் தீர்மானத்தை நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவிப்பதற்காக வருகை தந்தோம்.
மேலும், பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்ற வாக்குறுதியை என்னிடம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர் குடும்பத்தில் பாதுகாக்கும் விதமாக செயல்பட்டுள்ளார். பாரதிய ஜனதா தனித்து வெற்றி பெற முடியாது. இதற்கு முன்பாக திமுக, அதிமுக என்று திராவிட கட்சிகளின் முதுகில்தான் பாஜக சவாரி செய்து வந்தது. இனிமேல் அதுபோன்ற நிலைமை தமிழகத்தில் இருக்காது. இதனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்தி உள்ளார்.
எனவே, அவருக்கு இஸ்லாமிய மக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். நாடாளுமன்றத் தேர்தல் பாஜகவுக்கும், நோட்டாவிற்கும் போட்டியான தேர்தலாகத்தான் அமையுமே தவிர, வேறு எந்த வெற்றியும் பெற முடியாது. பாஜகவிற்கு எதிராக அதிமுக 40 நாடாளுமன்றத் தொகுதிகளையும் பெறும். தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினர் மக்கள், அதில் உறுதியாக உள்ளனர்” என்று கூறினார்.
இதையும் படிங்க: சிறுபான்மையினர் வாக்குகளை ஒன்றிணைக்கும் எடப்பாடி.. அடுத்த கட்ட நகர்வு என்ன?