சேலம்: கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையின்போது திமுக சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத தற்போதைய மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் நேற்று (ஜூலை 28) தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல் துறையினர் அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 1500 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள சேலம் மாநகரக் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்படி,
- பேரிடர் ஊரடங்கை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது,
- தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் கரோனா பரவலுக்குக் காரணமாக இருந்தது,
- காவல் துறையின் அனுமதியின்றி கூடியது
ஆகிய மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சேலம் மாநகரில் 1500 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் 78 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்திய 5,000-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.