இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்," சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் இல்லை . இதுவரை காய்ச்சல் அறிகுறியுடன் 110 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர் . அவர்களில் 6 பேருக்கு மட்டுமே டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு தனி வார்டில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்தாண்டை விட இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் இல்லை. இதற்கு பொதுமக்களிடம், அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளே காரணம். மேலும் காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகி பொதுமக்கள் சிகிச்சை பெற்றுக் கொள்ள முன்வரவேண்டும்.
குறிப்பாக அவர்களே மருந்து எடுத்துக் கொள்ளக்கூடாது. அதேபோல் தனியார் மருத்துவமனைகள் நோயாளியை தீவிர நிலையில் அரசு மருத்துவமனைக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும். லேசான காய்ச்சல் அறிகுறி இருந்தாலும் ரத்த பரிசோதனை செய்து கொண்டு, அதற்கு தகுந்தாற்போல் பொதுமக்கள் சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. காய்ச்சல் அறிகுறி தென்படும் போது பொதுமக்கள் அதிகம் தண்ணீர் குடிப்பது, அரிசி கஞ்சி, ஆகியவற்றை உட்கொண்டு உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சேலம் அரசு பொது மருத்துவமனையை பொருத்த வரை டெங்கு காய்ச்சல் குணமான பிறகும் நோயாளிகள் இரண்டு நாள் தங்கி முழுபரிசோதனை செய்து கொண்டு முழுமையாக டெங்கு குணமானது என்று தெரிந்த பிறகு வீட்டிற்குச் செல்லும் வகையில் "ஸ்டெப் டவுன் வார்டு" அமைக்கப்பட உள்ளது. அது இன்னும் 48 மணி நேரத்திற்குள் செயல்பாட்டுக்கு வரும்" என்றார்.