சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பகுதியில் உள்ள கோவிந்த கவுண்டர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்களான பாலாஜி (16), பிரசாந்த் (17) ஆகிய இருவரும் சேலம் அடுத்த கன்னங்குறிச்சி புது ஏரியில் குளிப்பதற்காக இன்று (ஏப்.22 ) மதியம் சென்றுள்ளனர்.
இருவரும் தண்ணீரில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது, உடன் சென்ற மற்றொரு மாணவர் நீீச்சல் தெரியாததால் கரையிலே அமர்ந்துள்ளார். அப்போது பாலாஜி, பிரசாந்த் ஆகிய இருவரும் சேற்றில் கால் மாட்டிய நிலையில் மேலே வர முடியாமல் நீருக்குள் மூழ்கி உள்ளனர்.
இதனையடுத்து இருவரும் நீருக்குள் மூழ்கியதை அறிந்த மற்றொரு சிறுவன், உடனே கூச்சலிட்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்களிடம் தகவல் கொடுத்தார். இதையடுத்து சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செவ்வாய்பேட்டை தீயணைப்புத் துறையினர் நீரில் மூழ்கிய இரண்டு சிறுவர்களையும் தேடினர். பின்னர் உயிரிழந்த இரண்டு மாணவர்களின் சடலங்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக தீயணைப்புத் துறை வீரர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கன்னங்குறிச்சி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த சிறுவர்களின் சடலங்கள் உடற்கூராய்வுக்காக பிறகு அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த உயிரிழப்பு சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 24 மாணவிகளிடம் பாலியல் சீண்டல்: திருவண்ணாமலையில் ஆசிரியர் கைது!