ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சின்ன மாயாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி கோபிநாத் (29). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த எடிசன் (25) என்பவருக்கும் இடையே கஞ்சா விற்பனை செய்வதில் தொழில் போட்டி இருந்துள்ளது.
இதனிடையே ஆகஸ்ட் 7ஆம் தேதி கோபிநாத் அவரது நண்பர் தேவகுமார் ஆகியோர் சேர்ந்து, எடிசனை வெட்டிப் படுகொலைசெய்தனர். அதனையடுத்து, கீழக்கரை காவல் துறையினர் இருவரையும் கைதுசெய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
பின்னர் நவம்பர் 5ஆம் தேதி இருவரும் மதுரை சிறையிலிருந்து சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை பிணை பெற்று வெளியே வந்தனர்.
அதன்படி நவம்பர் 6ஆம் தேதி சேலம் சூரமங்கலம் சுப்ரமணிய நகர் பகுதியில் தாங்கியபடி இருவரும் சூரமங்கலம் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டுவந்தனர். இந்நிலையில் நேற்று (நவம்பர் 24) மாலை இருவரும் காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பின், தாங்கள் தங்கியிருந்த அறைக்குத் திரும்பிச் சென்றுகொண்டிருந்துள்ளனர்.
அப்போது, சேலம் சுப்பிரமணிய நகர் அருகே சென்றுகொண்டிருந்தபோது நான்கு பேர் பயங்கர ஆயுதங்களுடன் அவர்களை விரட்டியுள்ளனர். இதில் சுதாரித்துக் கொண்ட தேவகுமார் அங்கிருந்து தப்பி ஓடி சூரமங்கலம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.
ஆனாலும் தப்பி ஓட முயன்ற கோபிநாத்தைச் சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. இந்தக் கொடூரத் தாக்குதலில் நிலைகுலைந்து கீழே விழுந்த கோபிநாத் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், கோபிநாத்தின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்தக் கொடூர கொலையை செய்துவிட்டு தப்பியோடி, சேலம் மத்திய பேருந்து நிலையப் பகுதியில் பதுங்கியிருந்த எடிசனின் உறவினர்கள் கார்த்திக், விக்னேஷ், அந்தோணி, ரமேஷ் ஆகியோரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
தற்போது பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் கோபிநாத் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சி பதிவு வெளியாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சி சேலம் பகுதிகளில் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.