சேலம்: ஓமலூர் வட்டம், தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது, மானத்தாள் கிராமம். இந்த கிராமத்தின் நிர்வாக அதிகாரியாக தாரமங்கலம் பொத்தியாம்பட்டியைச் சேர்ந்த வினோத்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த ஒன்றரை வருடங்களாக, இதே கிராமத்தில் வினோத் குமார் விஏஓவாக பணியாற்றி வருகிறார்.
இதனிடையே, இந்த கிராமத்தில் உள்ள வருவாய்த் துறைக்குச் சொந்தமான நிலங்களில் இருந்து, தனியார் கட்டட கட்டுமானத்திற்குத் தேவையான கரம்பை மண் வெட்டி எடுக்கப்பட்டு, லாரிகளில் கடத்தும் சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே, இது குறித்து வினோத் குமார் பணிக்கு வந்ததில் இருந்து மண் கடத்தலைத் தடுத்து, கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி அன்று, மானத்தாள் கிராமம் தாண்டவனூர் பகுதியில் உள்ள அரசு நிலத்தில், டிராக்டர் மற்றும் பொக்லைன் வாகனத்தைக் கொண்டு மண் கடத்தலில் ஒரு கும்பல் ஈடுபட்டு வந்துள்ளது. இது குறித்து கிடைத்த புகாரின் பேரில், வணிக ரீதியாக அனுமதி இல்லாமல் மண் கடத்திய டிராக்டர் மற்றும் பொக்லைன் வாகனத்தைப் பிடித்து கனிம வளத்துறையிடம் வினோத்குமார் ஒப்படைத்துள்ளார்.
இதனையடுத்து கனிம வளத்துறை அதிகாரிகள், தொளசம்பட்டி காவல் நிலையத்தில் வாகனங்களை ஒப்படைத்து புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் சித்துராஜ் மற்றும் விஜி ஆகிய இருவர் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 28) காலை விஏஓ வினோத்குமார், வழக்கம்போல் அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
அப்போது மண் கடத்தல் தொழில் செய்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சித்துராஜ் வினோத்குமாரை வழிமறித்து, அவரை கையால் தாக்கியது மட்டுமல்லாமல், செல்போனை பறித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த வீச்சரிவாளை எடுத்து, ‘உன்னைக் கொலை செய்தால்தான் என்னால் மண் கடத்தி விற்பனை செய்ய முடியும். அப்போதுதான் என்னால் பிழைக்க முடியும்’ என சத்தம் போட்டபடி விரட்டி உள்ளார்.
இதனால் அச்சம் அடைந்த வினோத்குமார், தொளசம்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். மேலும், தனது உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும், தன்னை கொலை செய்ய முயன்ற சித்துராஜை கைது செய்ய வேண்டும் என்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஓமலூர் தாலுகா கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவரும் காவல் நிலையத்திற்கு வந்து, உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
ஏற்கனவே கொடுத்த புகாருக்கு காவல் துறையினர் அவர்களை கைது செய்யாத நிலையில், தற்போது கொலை மிரட்டல் விடுத்து விரட்டிய சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, தூத்துக்குடி மாவட்டத்தில் விஏஓ லூர்து பிரான்சிஸ் என்பவர் அலுவலகத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறிய ஒரு சில நாட்களில் இந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
இதையும் படிங்க: VAO Murder: விஏஓ ஓடஓட வெட்டி படுகொலை; குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் அறிவிப்பு