சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் செல்போன்களை குரங்குகள் தூக்கிச்சென்று சேதப்படுத்திவருவதாகப் புகார் எழுந்துள்ளது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில், மூன்று நபர்கள் சீலிங் வொர்க் (மேற்கூரை அமைக்கும் பணி) செய்வதற்காக வந்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று (ஜன. 01) மாலை 5 மணி அளவில் அங்கு வந்த மூன்று குரங்குகள் ஜன்னல் வழியே பாடல் கேட்டுக்கொண்டு சீலிங் பணி மேற்கொண்டிருந்த விக்னேஷ் என்பவரின் செல்போனை தூக்கிச் சென்றது. அதனைக் கண்ட மூன்று பணியாளர்களும் குரங்கைத் துரத்திச் சென்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 5 மாடிகளிலும் ஓடியும் அவர்களால் செல்போனை குரங்குகளிடமிருந்து மீட்க முடியவில்லை. அப்போது, குரங்கு செல்போனை கீழே விடாமல் ஒற்றைக் கையில் பிடித்தவாறு ஓடியது. சிறிது தூரம் சென்ற குரங்கு செல்போனை வாயால் கவ்வி மனிதர்போல காதில் வைத்தது. இளைஞர்கள் துரத்துவதைக் கண்ட குரங்கு மீண்டும் ஓட்டம் பிடிக்கத் தொடங்கியது.
இவ்வாறு ஆட்சியர் அலுவலகத்தைச் சுற்றிச் சுற்றி சுமார் 3 மணி நேரம் இளைஞர்களைச் சுற்றவைத்து அதன்பிறகு குட்டி குரங்கிடம் செல்போனை வழங்கியது. ஆனால், குட்டி குரங்கு செல்போனைப் பிடிக்க முடியாமல் 5 அடுக்கு மாடியிலிருந்து கீழே எறிந்தது. செல்போனை அதன்பிறகு இளைஞர்கள் ஓடிச்சென்று எடுத்தனர். செல்போன் முழுவதும் உடைந்து உபயோகிக்க முடியாத நிலைக்கு குரங்கு உடைத்து வீணாக்கியது.
இதேபோல் இரண்டு நாள்களுக்கு முன்பு சமூக நலத் துறையில் பணிபுரியும் ஊழியரின் செல்போன், சத்துணவுத் திட்டத்தில் பணிபுரியும் ஊழியரின் செல்போன் என கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நான்கு உயர் ரக செல்போன்களை குரங்கு தூக்கிச் சென்று உடைத்துள்ளது.
"நான் இரவு பகலாக பணி செய்து சேமித்த பணம் 15 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய செல்போன், தற்போது உடைந்து வீணாகி உள்ளது வருத்தம் அளிக்கிறது" எனச் செல்போன் உரிமையாளர் வருத்தத்துடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒரே சமயத்தில் 30 ஆடுகளை கொன்ற குரங்கு கூட்டம்!