சேலம் பழைய பேருந்து நிலையம் வி.மார்க்கெட்டில் சுமார் அறுபது வருடங்களுக்கு மேலாக இயங்கிவந்தது. இந்த நிலையில் நகரம் வளர்ச்சி, வாகனப் பெருக்கம், மக்கள் தொகை பெருக்கம் போன்ற காரணங்களால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையத்தை அனைத்து அதிநவீன வசதிகளுடன் கூடிய நவீன இரண்டடுக்கு பேருந்து நிலையமாக மாற்றப்படும் என அறிவித்ததுடன் திட்டத்தை நடைமுறைப்படுத்த அடிக்கல் நாட்டினார்.
இதையடுத்து போஸ் மைதானத்தில் பேருந்துகள் நிறுத்துவதற்காக தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணி நடந்துவந்தது.
அந்தப் பணிகள் தற்போது முடிவடைந்த நிலையில் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயங்கிவந்த அனைத்துப் பேருந்துகளும் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் புதிய இடத்திற்கு பேருந்து நிலையம் வந்துள்ளதால் பேருந்து பயணிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுவருகிறது.