சேலம் மாநகர் எல்லைப்பகுதியில் உள்ள இரும்பாலை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர், இளஞ்சேரன். இவர் காக்காபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டுவரும் கடைகளுக்குள் புகுந்து சோதனை நடத்தியதாகவும்; கடை உரிமையாளர்களிடம் லஞ்சம் கேட்டு மிரட்டியதாகவும் சேலம் மாநகர காவல் துறை ஆணையர் செந்தில்குமாருக்குத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அவர், இளஞ்சேரன் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டார். அந்த விசாரணையில் இளஞ்சேரன் காக்காபாளையம் பகுதிகளில் உள்ள சிறு சிறு கடைகளில் சோதனை நடத்தி உரிமையாளர்களிடம் பேரம் பேசியது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து இளஞ்சேரனை பணியிடை நீக்கம் செய்து, சேலம் மாநகரக் காவல் ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார் .
இதேபோல சேலம் ஏற்காடு அடிவாரப் பகுதியில் செயல்பட்டுவரும் சோதனைச் சாவடியில் அஸ்தம்பட்டி ஆய்வாளர் பொன்ராஜ் சோதனை நடத்தியுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த தலைமைக் காவலர் பழனிவேல் குடிபோதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இன்னொரு தலைமைக் காவலர் பிரகாஷ் என்பவரும் குடிபோதையில் பணி செய்தது தெரியவந்தது. அவரிடம் சோதனை செய்ய ஆய்வாளர் பொன்ராஜ் முயன்றபோது தப்பி ஓடியுள்ளார்.
இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு தலைமைக் காவலர் பழனிவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் போதையில் தப்பியோடிய தலைமைக் காவலர் பிரகாஷை அஸ்தம்பட்டி காவல் துறையினர் தேடி வருகின்றனர்.