சேலம் பழைய பேருந்து நிலையம் அருகேவுள்ள அண்ணாநகர் பகுதியில் ஸ்ரீ காந்தாரி மீனாட்சி மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் பண்டிகை நடைபெறுவது வழக்கம்.
சென்ற ஆண்டும், நடப்பாண்டும் கரோனா பாதிப்பு காரணமாக கோயிலில் பண்டிகை நடத்தப்படவில்லை. அரசு விதித்த விதிமுறைகள் படி பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் , சாமிக்கு தினசரி பூஜை மட்டும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வழக்கம்போல் கோயில் பூசாரி நேற்று (மே 15) மாலை 6 மணியளவில் கோயில் நடையை சாத்திவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இதையடுத்து, மறுநாள் கோயிலுக்கு வந்த பூசாரி கோயிலில் இருந்த உண்டியல் திருடுபோனதைக் கண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உண்டியல் திருடுபோனது குறித்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து, கோயிலிலிருந்து 100 மீட்டர் தொலைவில் இரண்டு உண்டியல்கள் உடைந்த நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது. இது குறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அடையாளம் தெரியாத நபர்கள் கோயில் உண்டியலை திருடி வந்து இங்கு உடைத்து பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதனை தொடரந்து, அங்கிருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை!